November 22, 2022 தண்டோரா குழு
கோவை மாநகரில் நிகழ்ந்து வரும் பல்வேறு பிரச்சினைகளால் மக்கள் பிளவு பட்டு உள்ளனர். இதன் மூலம் பல்வேறு கட்சினர் அரசியல் செய்து வருகின்றனர். இந்நிலையில் கோவை அமைதி மற்றும் நல்லினத்திற்கான பேரவை சார்பில் சமய நல்லிணக்கன நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை மாநகரில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணிக்காக்கும் தொடர் பயணமாக கோவை அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான பேரவை சார்பில் “அமைதிக்கான பயணம்” எனும் கருத்தை மையமாக கொண்டு சமய நல்லிணக்க நிகழ்ச்சி
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ சோல்ஸ் தேவாலயத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், தேவாலய தலைவர் சார்லஸ் வின்சென்ட், சிரவை ஆதின குமரகுருபர சுவாமிகள், ஜாமஅத்தே இஸ்லாமி ஹிந்த் உலாமா பேரவை மாநில தலைவர் ராபிதத்துல், ஜெயின் மகாசபை கோவை இணை செயலாளர் ராகேஷ் கோலேச்சா, குருத்வாரா சிங் சபா தலைவர் குர்பிரீத் சிங், பிரபஞ்ச அமைதி சேவாஷ்ரமம் நிறுவனர் சிவ ஆத்மா, புனித மைக்கேல் தேவாலய அருட்தந்தை தனசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் மதத் தலைவர்கள் பேசியதாவது, மக்களில் ஒவ்வொரு குழுவினருக்கும் தங்களது தனித்துவமான மத நம்பிக்கை, வழிபாட்டு உரிமை, பண்பாடு ஆகியவற்றை நிலை பெறச் செய்வதற்கான உரிமை இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், பிற மதத்தவரின் நம்பிக்கை,வழிபாடு, பண்பாட்டை நிலைநிறுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய கடமையும் உண்டு. இந்த நிலை இருந்தால்தான் அன்பும் ஒத்துழைப்பும் நிறைந்த அமைதியான சுற்றுச்சூழல் நிலைத்திருக்கும்.
மேலும்,மதங்கள் கூறுகின்ற அறக்கருத்துக்கள், அன்பு,இரக்கம்,கருணை, மனிதாபிமானம், உதவும் மனப்பான்மை, விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை, போன்ற உயர்ந்த குணங்களெல்லாம் இந்நாட்டில் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு பல்வேறு அறம் சார்ந்த கருத்துகளை மக்களுக்கு எடுத்துரைத்தனர்.
தொடர்ந்து,கோவை அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்கான பேரவை சார்பில் அனைத்து மதத்தவரும் ஒன்றிணைந்து பலூன்கள் பறக்க விட்டனர்.