April 11, 2022 தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற பேராசிரியர் ஆ.சுரேஷ் வெங்கடாச்சலம் புற்றுநோய் துறைத் தலைவர் தங்கப்பதக்கம் தேர்வில் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறியிருப்பதாவது:
கோவையில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தங்கப்பதக்கம் தேர்வுஅறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு சிறந்த மருத்துவர்களை கெளவரப்படுத்தும் வகையில் அவர்களது பெயர்களையே வைத்துகொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேர்விற்கு பேராசிரியர் ஆ.சுரேஷ் வெங்கடாச்சலம் புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை தலைவர் தங்கப்பதக்கம் தேர்வு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.இந்த தேர்விற்காக பேராசிரியர் ஆ.சுரேஷ் வெங்கடாச்சலம் புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை தங்கப்பதக்க தேர்வு என்ற பெயரில் ரூ.1 லட்சம் வங்கியில் வைப்பு நிதி முதலீடு செய்யப்பட்டுள்ளது.இதில் கிடைக்கும் வட்டி மூலம் ஆண்டுதோறும் இந்த தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அண்மையில் நடைபெற்ற இந்த தேர்வில் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளை சேர்ந்த 19 மாணவர்கள் பங்கேற்றனர். எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக தேர்வு நடைபெற்றது.எழுத்து தேர்வில் 10 வினாக்கள் இடம் பெற்றிருந்தன.இதில் சிறப்பாக செயல்பட்ட 5 மாணவர்கள் செய்முறை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.இதில் தனியார் மருத்துவக் கல்லூரியில் முதுநிலை இறுதியாண்டு படிக்கும் பொது அறுவை சிகிச்சைப் பிரிவு மாணவி மருத்துவர் ஜனனி முதலிடத்தை பிடித்து பேராசிரியர் டாக்டர் ஆ.சுரேஷ் வெங்கடாச்சலம் புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை தங்கப்பதக்கத்தை வென்றார்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி முதுநிலை இறுதியாண்டு பொது அறுவை சிகிச்சைப் பிரிவு மாணவர் மருத்துவர் பிரபு இரண்டாமிடம் பிடித்தார். இரண்டாம் இடம் பிடித்தவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.
கோவை அரசு மருத்துவமனை பொது அறுவை சிகிச்சை துறைத் தலைவர் மருத்துவர் லட்சுமி நாராயணி, புற்றுநோய் அறுவை சிகிச்சை துறைத் தலைவர் மருத்துவர் ஆ.சுரேஷ் வெங்கடாச்சலம், பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரி பொது அறுவை சிகிச்சை துறை பேராசிரியர் சாரதா ஆகியோர் தேர்வு ஆய்வாளராக செயல்பட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.