April 29, 2022 தண்டோரா குழு
கோவை அரசு மருத்துவமனையின் தோல் பிரிவு, பாலியல்நோய் பிரிவு மற்றும் தொழு நோய் பிரிவு சார்பில் ரத்த நாள அழற்சி என்ற தலைப்பில் மருத்துவ மாணவர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் கோவை அரசு மருத்துவமனையின் டீன் நிர்மலா பேசியதாவது:
தொற்று நோய் கிருமிகள், மருந்துகள், புற்றுநோய், தன்னுடல் தாக்கு நோய் போன்றவற்றால் ரத்த நாளங்களில் அழற்சி ஏற்படுகிறது. ரத்தநாள அழற்சியால் பல்வேறு உள்ளுறுப்புகள், தோல் ஆகியவை பாதிக்கப்படுகின்றன. இதனை உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் பக்க விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
ரத்த நாள அழற்சி பாதிப்பு பெரிய, நடுத்தர மற்றும் சிறிய ரத்த நாளங்களில் ஏற்படுத்தும் பாதிப்பை வைத்து 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. பெரிய ரத்த நாளங்களில் ஏற்படும் அழற்சியால் தலைவலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி, கை வலி, கண்பார்வை பாதிப்பு ஆகியவை ஏற்படுகிறது. நடுத்தர ரத்த நாளங்கள் பாதிக்கப்படும் போது உடல் எடை குறைவு, சிவந்த புள்ளிகள், விதை வலி, உடல் தசைகளில் வலி, நரம்பு தளர்ச்சி, ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது.
சிறிய ரத்த நாளங்களில் ரத்த கசிவு ஏற்படுவதால் ரத்த ஓட்டம் குறைந்து விரல்கள் அழுகும் நிலை ஏற்படும். சிறுநீரகம், நுரையீரல், சுவாச மண்டலம், இருதய நோய் போன்றவற்றையும் பாதிக்கிறது. எனவே ஆரம்ப அறிகுறிகள் இருக்கும் போது உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து மாணவர்களுக்கு ரத்த நாள அழற்சி தொடர்பான வினாடி – வினா போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மருத்துவமனை கண்காணிப்பாளர் சடகோபன், இருப்பிட மருத்துவ அலுவலர் பொன்முடி, பல்வேறு துறை பேராசிரியர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள், இளநிலை மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.