April 20, 2022
தண்டோரா குழு
கோவை பெரியநாயக்கன்பாளையம் ஆர்.வி.நகரை சேர்ந்தவர் சுந்தரேசன் (28). இவர் தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார்.சம்பவத்தன்று இவர் குடும்பத்துடன் திருச்செந்தூரில் உள்ள உறவினரின் 60-வது திருமணத்துக்கு சென்றார்.
அப்போது அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் சுந்தரேசனின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்தார்.உடனே அவர் சுந்தரேசனுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார்.சுந்தரேசன் அங்கிருந்து புறப்பட்டார். பின்னர் பெரியநாயக்கன் பாளையம் போலீசுக்கு தகவல் அளித்தார்.மேலும் போலீசாரிடம் வீட்டில் நகை, பணம் எதுவும் இல்லை என்றார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சோதனை செய்ததில் திருடர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவை கிணத்துக்கடவு அடுத்த கோதவாடியை சேர்ந்தவர் முருகேசன். இவர் அங்குள்ள மாரியம்மன் கோயிலில் பூசாரியாக உள்ளார். சம்பவத்தன்று அவர் கோயிலில் பூஜைகளை முடித்து விட்டு வீட்டுக்கு சென்றார்.
மறுநாள் காலை வழக்கம் போல கோயிலுக்கு வந்தார். அப்போது கோயிலின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார்.அப்போது அங்கு இருந்த 1 பவுன் தங்க தாலி மற்றும் பித்தளை பாத்திரம், மணி உள்பட பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து முருகேஷன் கோயில் தக்கார் சரவணன் என்பவருக்கு தகவல் அளித்தார்.
அவர் உடனே கோயிலுக்கு வந்து கிணத்துக்கடவு போலீசில் புகார் தெரிவித்தார்.இதையடுத்து போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் கோவிலுக்கு விரைந்து வந்தனர்.பின்னர் அங்கு இருந்த கைரேகைகளை போலீசார் பதிவு செய்தனர்.மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காமிராக்களை ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலின் பூட்டை உடைத்து நகையை கொள்ளை அடித்து சென்ற திருடர்களை தேடி வருகின்றனர்.