October 7, 2024 தண்டோரா குழு
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் குற்றங்கள் சம்பவங்களை குறைக்கும் நோக்கில் சுமார் 96 கிராமங்களை கண்டறிந்து கோவை மாவட்ட காவல் துறையினர் மூலம் கடந்த (05.10.2024 – 06.10.2024) இரண்டு நாட்களாக PUBLIC COMMUNITY MEETING நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட கிராம பொதுமக்களுக்கு மாவட்ட காவல் துறையினர் கிராம பஞ்சாயத்து பகுதிகளில் நடைபெறும் குற்றங்களைத் தடுக்கும் வகையில் காவல் துறையுடன் அனைவரும் இணைந்து முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும்,கிராமப் பகுதிகளில் சந்தேகப்படும்படியான புதியவா்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
மேலும் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு காவல் உதவி செயலி, காவலன் SOS செயலி பற்றியும், பாலியல் குற்றங்கள் குறித்தும்,சாலை விபத்துக்கள் மற்றும் போதை பொருள் பயன்படுவதால் ஏற்படும் தீமைகளை பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும் காவல் உதவி செயலியில் பொதுமக்களுக்கு காவல் நிலையத்தின் இருப்பிடத்தை அறியும் வசதி, போலீஸ் கட்டுப்பாட்டு அறையின் தொலைப்பேசி எண்களை தெரிந்துகொள்ளும் வசதி, ஆன்லைன் பண மோசடி குறித்து புகார் தெரிவிக்கும் வசதி, மற்ற புகார்களை அளிக்கும் வசதி, அவசர கால எச்சரிக்கைகள், தகவல்களைபெறும் வசதி, வாகன விபரங்களை அறிந்துகொள்ளும் வசதி உள்ளன.
அதேபோல் காவல்துறைக்கு செலுத்த வேண்டிய அபராதங்களையும் இந்த செயலியின் மூலமாக பொதுமக்கள் செலுத்தலாம். காணாமல் போன ஆவணங்கள் குறித்து புகார், முதல் தகவல் அறிக்கை (FIR) விபரங்களையும் இச்செயலி மூலமாக பொதுமக்கள் அறிந்துகொள்ளலாம்.கூகுள் பிளே ஸ்டோரில் Kaaval Uthavi என ஆங்கிலத்தில் டைப் செய்து தேடினால் இந்த செயலியை பதிவிறக்க செய்து பயன்படுத்தலாம் என காவல் உதவி செயலியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர்.
இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் காவல்துறையினரிடம் குற்றங்களை தடுக்கும் வகையில் ரோந்துக்களை அதிகப்படுத்த வேண்டும் எனவும்,மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் சிசிடிவி கேமிராக்களை பொருத்தும் படியும் கோரிக்கை விடுத்தனர். இக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.