September 21, 2022 தண்டோரா குழு
கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி வளாகத்தில் ஜி.ஆர்.ஜி.-எல்.ஜி.டிஜிட்டல் இன்னவோஷன் டோஜா எனும் புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் துவங்கப்பட்டது.
கோவை பீளமேட்டில் தன்னாட்சி பெற்ற கல்லூரியாக பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், வளர்ச்சி பெறும் துறைகளில் பெண்கள் சிறப்பு தொழில் நுட்ப அறிவு பெற்று பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்,என்ற நோக்கத்தில், ஏர்கம்பிரசர் தயாரிப்பு நிறுவமான எல்.ஜி. நிறுவனத்துடன் இணைந்து, கல்லூரி வளாகத்தில் ஜி.ஆர்.ஜி-எல்.ஜி. டிஜிட்டல் இன்னோவேசன் டோஜோ என்ற புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய துவக்க விழா நடைபெற்றது.
எல்.ஜி. நிறுவனத்தின் டிஜிட்டல் மாற்றத்திற்கான யுக்தியான “சிறியதாக தொடங்கி வேகமாக உயர வேண்டும்” என்ற அடிப்படையில் துவங்கப்பட்ட புதிய மையத்தை, ஜி.ஆர்.ஜி. குழும கல்வி மையத்தின் சேர்மன் டாக்டர் ஆர்.நந்தினி,மற்றும் எல்.ஜி. எக்யூப்மெண்ட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் டாக்டர் ஜெய்ராம் வரதராஜ் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் உள்ள சந்திரா ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விழாவில் சிறப்பு வி்ருந்தினர்கள் கலந்து கொண்டனர். மாணவிகள் கல்லூரிகளில் பயிலும் போதே, தொழில்துறையினருடன் இணைந்து பணியாற்றி தொழிற்சாலை அனுபவம் பெறும் வாய்ப்பாக உருவாக்கப்பட்டுள்ள, ஜி.ஆர்.ஜி.&எல்.ஜி. டிஜிட்டல் இன்னோவேசன் டோஜோ மையத்தில் மாணவிகளுக்கு தேவையான கணினிகள் மற்றும் அதற்கான மென்பொருளை எல்.ஜி.நிறுவனம் அளிக்கும். ஒரே நேரத்தில் 20 பேர் பயிற்சி பெறும் வகையில், இந்த பயிற்சி மையம் திட்ட மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்துக்கேற்ப செயல்படும்.
மேலும் இங்கு பயிற்சி பெறும் அனைவரும் பரந்து விரிந்து கிடக்கிற தொழில் நுட்ப தளமான செயற்கை நுண்ணறிவு(ஏ.ஐ.), எந்திர படிப்பு(மெஷின் லேர்னிங்) விர்ச்சுவல் ரியாலட்டி மற்றும் ரோபோட்டிக் பிராசஸ் ஆட்டோமேஷன் ஆகியவற்றில் பணியாற்றுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உலகம் முழுவதும் உள்ள எல்.ஜி. நிறுவனத்தின் தொழில் நிபுணர்களுடன் மாணவிகள் கலந்துரையாடவும், கற்றுக் கொண்டு பணியாற்றுவதற்கும் வழிகாட்டப்படும்.
மேலும் மின்னணு தொழில்நுட்பத்தில் உள்ள வேலைவாய்ப்புகளை கண்டறியவும் மாணவிகளுக்கு வாய்ப்புகள் கிடைக்கும்.