February 25, 2022 தண்டோரா குழு
கோவையில் வலிமை படம் திரையிடப்பட்ட தியேட்டரில் அடிதடியில் ஈடுபட்ட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நடிகர் அஜித்குமார் நடிப்பில் ‘வலிமை’ திரைப்படம் நேற்று ரிலீசானது. இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர் அவரது படம் வெளியானதால் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தின் சிறப்பு காட்சி நேற்று அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. இதனையொட்டி நேற்று முன்தினம் இரவு முதலே ரசிகர்கள் தியேட்டர் முன்பு குவியத் துவங்கினர்.
இந்நிலையில், நேற்று காந்திபுரம் 100 அடி ரோட்டில் உள்ள ஒரு தியேட்டரில் வலிமை படம் பார்க்க ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். அப்போது தொண்டாமுத்தூர் அருள் ஜோதி நகரை சேர்ந்த தனியார் வங்கி துணை மேலாளர் கார்த்திகேயன்(29) என்பவர் படம் பார்க்க வந்தார். அவர் டிக்கெட் வாங்கிவிட்டு தியேட்டர் படிக்கட்டில் அமர்ந்திருந்தார்.
அப்போது அவர் மீது கூட்ட நெரிசலில் 2 பேர் மோதினர். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மோசஸ் மற்றும் தொப்பி சூர்யா ஆகியோர் கார்த்திகேயனை தகாதவார்த்தைகளால் பேசி அடித்து உதைத்தனர். இது தொடர்பாக கார்த்திகேயன் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் தாக்குதல், கொலைமிரட்டல் ஆகிய பிரிவுகளில் கோவையை சேர்ந்த மோசஸ், தொப்பி சூர்யா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.முன்னதாக இதே தியேட்டர் முன்பு பைக்கில் வந்த 2 பேர் பெட்ரோல் குண்டு வீசி தப்பினர். இதில் ஒரு பைக் சேதமடைந்தது. தியேட்டரில் படம் பார்க்க வந்த கோவை ரத்தினபுரியை சேர்ந்த நவீன்குமார்(22) என்பவருக்கு காலில் காயம் ஏற்பட்டது.
அவர் டாடாபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பான புகாரின் பேரில், காட்டூர் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசி தப்பி ஓடிய 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.