June 27, 2022 தண்டோரா குழு
பொதுமக்கள் அதி வேக இணைய சேவையை பெறும் விதமாக க்ரோபக்ஸ் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஜேசி மீடியா என்டர்டெயின்மென்ட் இணைந்து கோவை நேரு ஸ்டேடியம் வளாகத்தில் புதிய வைபை ஸ்மார்ட் மரம் நிறுவப்பட்டது.
கோவை மாநகரில் மத்திய அரசு மற்றும் மாநகராட்சி ‘ஸ்மார்ட் சிட்டி’ மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நேரு ஸ்டேடியம் வளாகத்தின் அருகே அமைக்கப்பட்ட புதிய வைபை இணையதள வசதி கொண்ட மரம் துவக்க விழா நடைபெற்றது.க்ரோபக்ஸ் வென்ச்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஜேசி மீடியா என்டர்டெயின்மென்ட் இணைந்து அறிமுகபடுத்தி உள்ள இதற்கான துவக்க விழாவில்,வைபை வளாகத்தை சரவணா ஸ்டீல்ஸ் உரிமையாளர் சரவணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வைஃபை மரத்திற்கு கீழே மழை நீர் சேகரிப்பு அமைக்கப்பட்டு, மரத்தை சுற்றிலும் சுமார் 40 க்கும் மேற்பட்டோர் அமர்ந்து இளைப்பாறும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. முக்கியமாக, இந்த மரத்தில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் மின்சாரம் செல்போன், லேப்டாப் போன்றவற்றுக்கு பயன்படுத்த வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.
இந்த வசதிகளை டென்மார்க் ஓட்டல் உரிமையாளர் ரமேஷ் துவக்கி வைத்தார். முன்னதாக வளாகத்தின் உள்ளே அமைக்கப்பட்ட எல்.இ.டி.பேனலை க்ரோபக்ஸ் நிர்வாக இயக்குனர் ரமேஷ் நாராயணசாமி மற்றும் இயக்குனர் வினோத் ஆகியோர் துவக்கி வைத்தனர்.பொது மக்களுக்கு அதி வேக இலவச வைபை சேவை வழங்கும் வகையில் இந்த மரம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதே போல அடுத்த மாதம் மக்கள் அதிகம் கூடும் காந்திபுரம் பேருந்து நிலையம் மற்றும் சாய்பாபாகாலனி பகுதியில் உள்ள ஊட்டி மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் ஆகிய இரண்டு இடங்களலும் ஸ்மார்ட் மரங்களை நிறுவ உள்ளதாகவும்,மேலும்,ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குரோபக்ஸ் குழுமத்தினரை இணைத்ததற்காக கோவை மாநகராட்சி ஆணையருக்கு குரோபக்ஸ் வென்ச்சர்ஸ் மற்றும் ஜே.சி.மீடியா எண்டர்டெயின்மெண்ட் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஜே.சி.மீடியா எண்டர்டெயின்மெண்ட் பங்குதாரர்கள் ஆர்.சதீஷ் குமார், ஆர்.மகா பிரபு மற்றும் அருண் ஈவெண்ட்ஸ் அருண் ஆகியோர் செய்திருந்தனர்.