October 11, 2022 தண்டோரா குழு
கோவையில் உள்ள முக்கிய பஸ் நிலையங்களில் காய்ச்சல் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு வருகிறது.
கோவையில் கொரோனா, ப்ளூ காய்ச்சல், டெங்கு உள்ளிட்ட நோய்களின் பரவலை கட்டுப்படுத்த மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட நகரின் முக்கிய பஸ்நிலையங்களில் மருத்துவ பரிசோதனை முகாம்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதுதவிர பொதுமக்கள் அதிகமாக கூடும் பகுதிகள், நடைபயிற்சிக்கு செல்லும் பகுதிகளிலும் மருத்துவ பரிசோதனை முகாம்கள் அமைக்கப்பட உள்ளது. இதில் வெளியூர் மற்றும் அறிகுறிகளுடன் வரும் பயணிகளுக்கு காய்ச்சல் மற்றும் தேவைப்படுபவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட உள்ளது. இந்த பணியை மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘கோவை பஸ் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் பரிசோதனை மையங்களில் தினமும் 1000 முதல் 2000 பேர் வரை காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட உள்ளோம்’’ என்றார்.