March 1, 2023 தண்டோரா குழு
கோவை பி.பி.ஜி.தொழில் நுட்ப கல்லூரியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில், நவீன தொழில் நுட்பங்களை காட்சிபடுத்தி மாணவ,மாணவிகள் அசத்தினர்.
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பி.பி.ஜி.தொழில் நுட்ப கல்லூரியில் அறிவியல் துறையில் இளம் விஞ்ஞானிகளுக்கான தேடலை ஊக்குவிக்கும் விதமாக நெர்ட்னியா (NERDNIA) எனும் தலைப்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதற்கான துவக்க விழாவில் பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் தாளாளார் சாந்தி தங்கவேலு மற்றும் துணை தலைவர் அக்ஷய் தங்கவேலு ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தனர்.
இதில், பி.பி.ஜி.தொழில் நுட்ப கல்லூரி மாணவ,மாணவிகளும் மற்றும் பிற கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பல்வேறு தலைப்புகளில் அறிவியல் கண்டுப்பிடிப்புகளைச் செய்து தங்கள் திறமைகளை வெளிக்காட்டினர். விவசாயத்தில் நீர் பாசன முறை, சென்சார் மூலம் குற்ற சம்பவங்களை தடுப்பது,சோலார்,ப்ளூ டூத் தொழில் நுட்பம்,செயற்கை கோள் தொடர்பு, உள்ளிட்ட நவீன தொழில் நுட்பங்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றது. இந்த கண்காட்சியை ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டு சென்றனர்.
தொடர்ந்து சிறந்த அறிவியல் கண்டுப்பிடிப்புகளுக்குப் பரிசு வழங்கும் விழா கல்லூரி அரங்கில் நடைபெற்றது.இதில் பி.பி.ஜி.கல்வி குழுமங்களின் தலைவர் டாக்டர் தங்கவேலு சிறந்த கண்டு பிடிப்புகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி மாணவர்களின் திறமையை ஊக்குவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சத்தியசீலன்,துறை தலைவர் நித்யபிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.