September 14, 2021 தண்டோரா குழு
கோவை புட்டுவிக்கி குளக்கரையில் மர்ம நபர்கள் சிலர் மருத்துவக் கழிவுகளைக் கொட்டி சென்றதால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவையில் உள்ள குளக்கரைகளில் கட்டிட இடிபாடுகளை கொட்டுவதும் மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவது தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு உக்கடம் பெரியகுளம் பகுதியில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தன.இதுகுறித்த புகாரின் பேரில் மாநகராட்சி ஊழியர்கள் அங்கு சென்று மருத்துவ கழிவுகளை அகற்றினர்.
இந்த நிலையில் செல்வபுரத்தை அடுத்து அமைந்துள்ள புட்டுவிக்கி குளக்கரையில் மர்ம நபர்கள் சிலர் மருத்துவக் கழிவுகளைக் கொட்டிச் சென்றுள்ளனர்.பயன்படுத்தப்பட்ட சிரஞ்சுகள், மருந்து பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்கள் குளக்கரை அருகே கொட்டப்பட்டுள்ளது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக இதனை சுத்தப்படுத்துவதோடு, இத்தகைய செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.