February 18, 2023 தண்டோரா குழு
கோவை வழித்தடத்தில் மேட்டுப்பாளையம் – திருநெல்வேலி இடையே மீண்டும் சிறப்பு வாராந்திர ரயில் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, பொள்ளாச்சி வழித்தடத்தில் திருநெல்வேலிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. ஏராளமான பயணிகள் இந்த வாராந்திர ரயில் மூலமாக பயனடைந்தனர். இந்த ரயில் மூலம் ரயில்வே துறைக்கு கணிசமான வருவாயும் கிடைத்தது.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதியுடன் இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனால், பயணிகள் பலரும் அவதிக்கு உள்ளாகினர். மீண்டும் இந்த சிறப்பு ரயிலை இயக்க வேண்டும் என பயணிகள் சங்கங்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பயனாக,மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை, பொள்ளாச்சி வழித்தடத்தில் திருநெல்வேலிக்கு மீண்டும் வாராந்திர ரயில் சேவை வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை இயக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
திருநெல்வேலியில் இருந்து ஏப்ரல் 6ஆம் தேதி முதல் ஜூன் 29ஆம் தேதி வரை வியாழக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு புறப்படும் வாராந்திரச் சிறப்பு ரயில் மறுநாள் காலை 7.30 மணிக்கு மேட்டுப்பாளையம் நிலையத்தை சென்றடையும். இதேபோல், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஏப்ரல் 7ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் இரவு 7.45 மணிக்கு புறப்படும் வாராந்திரச் சிறப்பு ரயில், மறுநாள் காலை 7.45 மணிக்கு திருநெல்வேலியைச் சென்றடையும்.
இந்த ரயிலானது, கோவை, போத்தனூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழநி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல்,மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடயம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிகமாக இயக்கப்படும் இந்த ரயிலை நிரந்தரமாக்க வேண்டும் என பயணிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.