June 9, 2017
தண்டோரா குழு
கோவை மாவட்டம் போத்தனூரை அருகே உள்ள கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் நஞ்சம்மாள். இவருக்கு வயது 85. இவர் தனது வீட்டில் உள்ள தோட்டத்தில் இரண்டு சந்தன மரங்களை வளர்த்து வந்தார்.
இந்நிலையில், நேற்று இரவு நஞ்சம்மாள் வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த இரண்டு சந்தன மரங்களையும் வெட்டி கடத்தி சென்றுள்ளனர்.
காலை விடிந்ததும் தோட்டத்திற்கு வந்து பார்த்த நஞ்சம்மாள் சந்தன மரங்கள் வெட்டப்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அதன் பின் இச்சம்பவம் குறித்து நஞ்சம்மாள் போத்தனூர் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் போத்தனூர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சந்தன மரங்களை வெட்டி கடத்திய கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.