October 31, 2022 தண்டோரா குழு
கோவை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. கோவை மக்கள் அச்சம்பட தேவையில்லை என ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
கோவை உக்கடம் ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23ம் தேதி கார் வெடித்து ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம், போலீசார் என அனைத்து துறைகளும் இணைந்து மாவட்டத்தில் உள்ள பதற்ற நிலையை போக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். போலீசார் சிறப்பாக செயல்பட்டு இச்சம்பவம் தொடர்பாக 6 பேரை கைது செய்தனர். இதன் காரணமாக கோவை மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர்.
இது குறித்து கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் கூறுகையில்,
‘‘கோவையில் கார் வெடிப்பு தொடர்பாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 3 நாட்களாக தொடர்ந்து பல்வேறு அமைப்பினருடன் ஆலோசனை கூட்டம் நடத்தி கருத்துகள் கேட்டறியப்பட்டுள்ளன.
கோவை மக்கள் எந்த சலனமும் இன்றி இயல்பாக உள்ளனர். கோவை மக்கள் அச்சமடைய தேவையில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகை நிகழ்வுகள் கோவையில் அமைதியான முறையில் சிறப்பாக அமைந்தது. இதுபோன்ற சம்பவம் கோவை மாவட்டத்தில் நிகழாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன’’ என்றார்.