May 19, 2022 தண்டோரா குழு
கோவை அவினாசி சாலையில் உள்ள நஷ்டத்திர விடுதியில் நடைபெற்ற தொழிலதிபர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின் தலைமையுரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்,
குணத்தால் மணத்தால் இதமான கோவைக்கு தான் வந்திருக்கிறேன் என தொடங்கிய முதல்வர் ஸ்டாலின் ஜவுளி, பொறியியல், ஆட்டோ மொபைல், வெட் கிரைண்டர், தங்க நகை மற்றும் ஆபரண கற்கள் உற்பத்தி என அனைத்து தொழில்களில் சிறந்த நகரம் எனவும் இந்த கோவை மக்கள் தொடாத துறையும் அவர்கள் தொட்டு துலங்காத துறையும் இல்லை என புகழாரம் சூட்டினார். தற்போது கோவை தகவல் தொழில்நுட்பத்துறையிலும் வேகமாக வளர்ந்து வருவதாகவும் சென்னைக்கு அடுத்தபடியாக மென்பொருள் துறையில் கோவை கோவை வளர்ந்து வருவதாகவும், டைட்டில் பார்க் தொழில் பூங்காக்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்று உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்கும் மேற்கு மண்டலத்தின் தொழில் முன்னேற்றதிற்கு கோவை விமான நிலையம் அவசியம் எனக்கூறியவர், கோவை விமான நிலையத்தை உலகத்தரத்தில் உயர்த்தும் பணியை கலைஞர் துவங்கி வைத்ததாகவும், விமான நிலைய விரிவாக்கத்திற்கு 1132 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளதோடு விரைவில் இந்த பணிகள் முடிக்கப்படும் எனவும் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை விமான நிலையம் உயர்த்தபடும் என முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்தார்.
வளம் மிக்க இந்த மாவட்டத்தை மேலும் வலுப்படுத்த புத்தாக்கம், தகவல் தொடர்பு நுட்பம் வான்வெளி பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு வழங்கும் புதிய மையமாக “நியூ ஆப் ஃபார் இன்ஜினியரிங் டெக்னாலஜி” உருவாக்கப்படுவதோடு கோவையின் கட்டமைப்பு தேவைகளை நிறைவு செய்யக்கூடிய வகையில் புதிய மாஸ்டர் பிளான் உருவாக்கப்படும் என தெரிவித்தார்.
சிட்கோ,டிக்டோ,சிப்காப்,டான்சிட்கோ ஆகிய அரசு நிறுவனங்களை இணைந்து அறிவுசார் ஆராய்ச்சி பூங்கா கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் அமைக்கபடும் என தெரிவித்தவர், தெற்கு ஆசியாவில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு உகந்த மாநிலம் தமிழ்நாடு ஆக இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருவதாகவும் அரசு ஏற்படுத்தியுள்ள வசதி வாய்ப்புகளை தொழில்துறையினர் பயன்படுத்தி மேன்மேலும் வளர்ச்சி பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
சிறுகுறு நிறுவனங்களுக்கு கடந்த ஆண்டைவிடக்கூடுதலாக 360 கோடி ஒதுக்கபட்டு 3522 நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டுள்ளதாகுவும், கடன் உத்திரவாத திட்டம், குறைந்த விலையில் தொழில் மனைகள் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கோவை உள்ளிட்ட மேற்கு மண்டலத்தில் தொழில்களை பாதுகாக்க தனிகவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து கோவையில் தமிழகத்தின் சார்பில் தொழில் துறையின் வளர்ச்சிக்கு தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைகளில் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஜியோடெக்ஸ்டைல் மற்றும் தென்னை நார் பிரபலபடுத்துவும் மாநிலம் முழுவதும் கயிறு தொழில் குழுமங்கள் மேம்படுத்தவும், “தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம்” கோவையில் தொடங்கப்படும் எனவும் இதற்கு முதற்கட்டமாக 5 கோடி ரூபாய் மூலதனமாக ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் புத்தொழில் வளர்ச்சிக்கு வழிகோலும் விதமாக மூன்று மண்டல அளவிலான புத்தொழில் மையங்கள் அமைக்கப்படும் என அரசு அறிவித்திருந்தை குறிப்பிட்டவர் ஈரோடு,திருப்பூர்,கரூர். உள்ளிட்ட பகுதிகளில் அரசு மானியத்துடன் நிறுவனங்கள் அமைக்க அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும், ஜவுளித் துறையில் புதிய மேம்பாட்டு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் மின்னணு சாதனங்கள் பயன்பாட்டில் சிப் உலகளவில் அதிகரித்துள்ள நிலையில் இந்த சூழலை நன்கு பயன்படுத்திக்கொண்டு தமிழகத்தில் சிப் உற்பத்திக்கான முயற்சிகளை மேற்கொண்டு தொழில்துறையின் பங்களிப்பை மேலும் அதிகரிக்க வேண்டும் எனவும் கோவையை மையமாக வைத்து செயல்பட்டு வரும் வான்வெளி மற்றும் பாதுகாப்பு பொருட்கள் தொடர்பான உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுகொண்ட முதல்வர் ஸ்டாலின், நூல் விலை உயர்வு மேற்கு மண்டலத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது இதனால் பலர் தொழிலாளர்கள் தங்கள் வேலையை இழக்க இருக்கின்றனர் என்பது தனக்கு தெரியும் எனவும் கச்சா பொருட்களின் பலரும் தொழில்நடத்த முடியாமல் உள்ளனர், இதன் தீவிரத்தை உணர்ந்த நானும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருக்கும் பிரதமர் மற்றும் ஒன்றிய அமைச்சர்களிடம் கடிதம் எழுதி வலியுறுத்தியிருப்பதாகவும் தொழில்துறையினர் கவலைகளை தீர்க்க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அதிக முதலீடுகளை மேற்கொண்டு தயாரிப்புகளை பலப்படுத்துங்கள், பல்வகை படுத்துங்கள், மதிப்பு கூட்டு பொருட்களை உற்பத்தி செய்யுங்கள் என தொழில் முதலீட்டாளர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன் என கூறிய அவர் தமிழ் நாட்டின் பொருளாதாரம் பன்முறை பொருளாதாரமாக மாற வேண்டும் என்பதுதான் எனது இலக்கு எனவும் வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுங்கள், வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உள்வாங்கி செயல்படுங்கள், தொழில் மட்டுமல்ல சமூகத்திலும் மாற்றங்களை ஏற்படுத்துவதாக உங்கள் பணிகள் நிச்சயம் இருக்க வேண்டும் எனவும், உற்பத்தி,ஏற்றுமதி மற்றும் பொருளாதார வளர்ச்சி இவை மூன்றையும் வலுப்படுத்துவதற்கான வழிகளை இதுபோன்ற சந்திப்புகளின் மூலம் தான் பெற முடியும் எனவும் தொழில் முயற்சிகளுக்கு தமிழக அரசு எப்போது உறுதுணையாக நிற்கும் என அப்போது அவர் தெரிவித்தார்.
இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கோவை,திருப்பூர் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களைச்சேர்ந்த நாற்பதுக்கும் மேற்பட்ட தொழில் அமைப்புகள், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ,சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மு அன்பரசன்,தொழில்துறை, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அரசு கூடுதல் தலைமைச்செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.