November 15, 2021 தண்டோரா குழு
ஆசிரியரின் பாலியல் சீண்டலால் தற்கொலை செய்து கொண்ட கோவையை சேர்ந்த 12 ஆம் மாணவியின் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
கோவையில் தனியார் பள்ளியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி அப்பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியின் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் மாணவியின் வீட்டிற்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் நேரில் வந்து அவரது பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதன் ஒரு பகுதியாக அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் தேசிய செயலாளர் முத்துராமலிங்கம் மாணவியின் பெற்றோரை நேரில் சந்தித்து தனது அனுதாபங்களையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஏபிவிபியின் தேசிய செயலாளர் முத்துராமலிங்கம்,
மாணவியின் கடிதத்தில் குறிப்பிட்ட மற்ற இருவர் யார் அவர்களின் பின்புலம் என்ன என்பது குறித்து ஆராய்ந்து விரைவில் அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், இவ்வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். நீட் தேர்வு போன்றவைகளின் அச்சத்தால் மாணவர்கள் தற்கொலை செய்யப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்றும் முத்துராமலிங்கம் குறிப்பிட்டார்.