March 11, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் கோவை மாநகராட்சியின் 2022-2023ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தயாரித்தல் தொடர்பாக கலந்தாலோசனைக் கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாநகராட்சி முழுவதும் ஒரே சீரான குடிநீர் கட்டணம், பழுதடைந்த சாலைகளை சீரமைத்தல், சீரான குடிநீர் விநியோகம், ஓ.எஸ்.ஆர் இடங்களில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பராமரித்தலை கண்காணித்தல், கோவையில் உள்ள குளங்களை பராமரித்தல் மேம்படுத்துதல்,
மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் ஊதியம், ஓய்வூதியம் வழங்க மாதாந்திர தேவைப்படும் நிதி, மாநகராட்சிக்கு கிடைக்கும் கேளிக்கை வரி உள்ளிட்ட வரிகள், வங்கிக்கடன் அதன் மூலம் நடத்தப்படும் பணிகள் வங்கிக் கடனுக்கு செலுத்தும் வட்டி, பொறியியல், சுகாதாரம், நகரமைப்பு மற்றும் கல்விப் பிரிவுகளில் இருந்து ஒவ்வொரு தலைப்புகளின் கீழ் என்னென்ன பணிகள் செய்ய வேண்டும், எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும் என்பது போன்றவைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில் மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா, துணை மேயர் வெற்றிசெல்வன், தன்னார்வலர்கள், தொண்டுநிறுவனத்தினர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், மாநகராட்சி உதவி கமிஷனர்கள், மாநகராட்சி பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.