May 4, 2024 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம் இன்று 4ம் தேதி காலை 11:00 மணி அளவில் திருச்சி ரோட்டில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்தது.
இந்த கூட்டத்தில் சங்கத் தலைவர் உதயகுமார் செயலாளர் கேசிபி சந்தர பிரகாஷ் பொருளாளர் அம்மாசையப்பன் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு;
பணி அனுபவ சான்று, பிட் கெபாசிட்டி , பிளான்டில் உள்ள தளவாடங்கள், மிஷினரி மற்றும் நிதி நிலைமை தகுதியுள்ள ஒப்பந்ததாரர்கள் மட்டுமே டெண்டரில் பங்கு பெற வேண்டும் என பொதுப்பணி துறை, நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சியின் பொதுவான விதி.
ஆனால் தற்போது நடக்கும் ஒப்பந்தங்களில் பொதுப்பணித்துறை நெடுஞ்சாலை மற்றும் மாநகராட்சி பணிகளில் தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. அவர்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்களை சரி பார்க்காமல் உண்மை தன்மையை அறியாமல் போலியான ஆவணங்களை வைத்து பணிகளை துவக்கி வருகிறார்கள். இதனால் பல ஆண்டுகாலம் ஒப்பந்த பணி செய்து வரும் நேர்மையான பல ஒப்பந்ததாரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.
தகுதியற்ற ஒப்பந்ததாரர்கள் தரமற்ற பணிகளை செய்து ஒப்பந்ததாரர்களுக்கும் மாநகராட்சி மற்றும் அரசு துறைகளுக்கு அவ பெயர் ஏற்படுத்தி வருகின்றனர்.
அதிகாரிகள் துணையுடன் பல கோடி ரூபாய் மோசடி செய்து வருகின்றனர்.
இதனை எதிர்த்து உரிய நடவடிக்கை சங்கத்தின் சார்பில் எடுக்கப்படும்
ஷெட்யூல் ஆப் ரேட்டில் இல்லாத பணிகளை அதிகப்படியாக சேர்த்து அதிக விலை புள்ளி மதிப்பீடு தயாரித்து அதனை ஒப்பந்தம் வரும்10 நாட்களுக்கு முன்பே அட்வான்ஸ் ஒர்க் என்ற பெயரில் முன்கூட்டியே செய்கிறார்கள். இந்த பணிகளுக்கு யாரும் டெண்டர் போட வேண்டாம் என சம்மந்தப்பட்ட அரசு துறையினர் தகவல் தெரிவிக்கிறார்கள்.இது நூதன முறையில் நடைபெற்று வரும் மெகா ஊழல்.
இந்த முறைகேடு தொடர்பாக அனைத்து அரசுத் துறையினருக்கு புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் .
மேலும் அட்வான்ஸ் வொர்க் என்ற பெயரில் நடந்த அனைத்து பணிகளையும் விலை புள்ளிகளை ஆய்வு செய்து அதில் உள்ள தவறுகள் தொடர்பாகவும் புகார் தரப்படும்.
டெண்டரில் 5 சதவீதத்திற்கும் குறைவான விலைப்புள்ளி வழங்கினால் மதிப்பீட்டுத் தொகையில் 2 சதவீத தொகையை கூடுதலாக வைப்புதொகையாக செலுத்திய பின்பு பணிகளை துவக்க வேண்டும் என்பது விதி. ஆனால் பல பணிகளில் கடந்த மூன்று ஆண்டுகளில் இதனை யாரும் சரியாக கடைபிடிக்கவில்லை.
இந்த தவறுகளுக்கு காரணமான ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜல்லி,எம் சாண்ட் போன்ற கட்டுமான பொருட்கள் அதிக விலை ஏற்றம் அடைந்துள்ளது. எனவே ஷெட்யூல் ஆப் ரேட் படி விலையை உயர்த்தி தர வேண்டும்.
லாரி போக்குவரத்து கணக்கீடு செய்யும் போது அருகில் உள்ள உபயோகத்தில் இல்லாத குவாரிகளை கணக்கில் எடுக்கிறார்கள். இதை தவிர்த்து உபயோகத்தில் உள்ள குவாரிகளை கணக்கீடு செய்து திட்டம் தயாரிக்க வேண்டும்.
கோவை மாநகராட்சி கணக்கு பிரிவு அலுவலர்கள் 3 ஆண்டுகளுக்கு மேலாக அதற்குரிய பைல்களை சரியாக பராமரிக்க வில்லை.
எந்தெந்த ஒப்பந்ததாரர்களுக்கு எந்தெந்த பணிகளுக்கு எவ்வளவு தொகை வழங்க வேண்டும் என்ற கணக்குகளை முறையாக பராமரிக்கலாம் அலட்சியமாக செயல்பட்டு வருகிறார்கள்.
அவர்களுக்கு சாதகமான ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே டெபாசிட் தொகை முழுவதுமாக திரும்ப வழங்குகிறார்கள்.
ஒப்பந்ததாரர்களுக்கு பில் தொகை சீனியாரிட்டி அடிப்படையில் வழங்க வேண்டும். ஆனால் மாநகராட்சி கணக்கு பிரிவினர் பல ஆண்டுகளாக தங்களுக்கு சாதகமான ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே பில் தொகை வழங்கிவிட்டு மற்றவர்களுக்கு பல ஆண்டுகளாக மாதங்களாக பில் தொகையை கிடப்பில் வைத்திருக்கிறார்கள். பாரபட்சமாக செயல்படும் கணக்கு பிரிவு மீது உரிய புகார் வழங்கப்படும்.
மாநகராட்சி பணிகளில் ஒரு சதவீத அடிப்படையில் மேற்கோள் செய்து பணிகள் தொடர்பாக புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என சங்க கூடத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.