March 8, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையோரம் உள்ள மரங்களில் உள்ள காய்ந்த மரக்கிளைகளை அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சாலையோரம் உள்ள மரங்கள் தண்ணீர் இன்றி வறண்டு வருகின்றன. இதனால் மரக்கிளைகள் காய்ந்து அதில் உள்ள இலைகள் சாலைகளில் விழுகின்றன. இதனால் சாலைகள் மற்றும் தெருக்களில் குப்பைகள் அதிகரிக்கின்றன.
மேலும் சாலையில் விழும் மரக்கிளைகளால் வாகன ஒட்டிகளும் அவதியடைந்து வருகின்றனர். சில இடங்களில் வாகனங்கள் மீதும் மரக்கிளைகள் விழும் நிலை உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு காய்ந்த நிலையில் உள்ள மரக்கிளைகளை உடனே அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
சாலையோரம் காய்ந்த நிலையில் உள்ள மரக்கிளைகள் அகற்றப்பட்டு வருகின்றன. தற்போது வெயிலின் தாக்கம் காரணமாக மரங்கள் வறண்டு மரக்கிளைகள் காய்ந்து வருகின்றன. அவ்வாறு உள்ள மரக்கிளைகள் கண்டறிந்து உடனே அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது, என்றார்.