December 18, 2021 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி பகுதிகளில் மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வரி செலுத்துபவர்கள் உள்ளனர். அவர்கள் குடிநீர் வரி, சொத்து வரி, குப்பை வரி போன்று மாநகராட்சியில் வரி விதிப்பு அம்சங்களில் வரி செலுத்துபவர்கள் ஆகும். நடப்பு 2021-22-ம் நிதியாண்டில் நிலுவை தொகை மற்றும் நடப்பு தொகை இரண்டும் சேர்த்து மொத்தம் ரூ.373 கோடி வரி தொகை வசூலிக்க மாநகராட்சி நிர்வாகம் சார்பில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த நிதியாண்டில் கொரோனா தொற்றின் தாக்கம், ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் 93 சதவீதம் வரை மட்டுமே வரி வசூலிக்கப்பட்டது. நடப்பு நிதியாண்டில் கடந்த 8 மாதங்களில் சுமார் ரூ.121 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சியினர் தொடர்ந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால் நடப்பு நிதியாண்டில் நடப்பு கணக்கில் இதுவரை 33 சதவீதம் வரி வசூலிக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள ரூ.252 கோடி வரி வசூல் இந்த நிதியாண்டிலேயே வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் ரூ.1 கோடிக்கு மேல் வரி வசூல் பாக்கி உள்ள நிறுவனங்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.