January 22, 2022 தண்டோரா குழு
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளது.கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்தில் கொரோனா உறுதி செய்யப்படுவர்களில் 50 சதவீதம் பேர் மாநகராட்சி பகுதிகளில் வசித்து வருகின்றனர். இதனால் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே மாநகராட்சி பகுதிகளில் கொரோனா பரவல் சதவீதம் 22 ஆக இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தினந்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் பரவல் சதவீதம் 25 ஆக உயர்ந்துள்ளது.
நோய் தொற்றை கட்டுப்படுத்த தினந்தோறும் 4000 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.இதில் 800க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் தற்போது பரவல் சதவீதம் அதிகரித்தது தொடர்ந்து மாநகராட்சி பகுதிகளில் 6 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதில் 1500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தொற்றால் பாதிக்கப்படும் பொதுமக்களை கண்காணிக்கவும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், தனிமைப்படுத்தப்படவும் போதுமான வசதி மாநகராட்சி சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.