March 30, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட், மாநகராட்சி விக்டோரியா அரங்கில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்ற மாமன்ற சிறப்பு கூட்டத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
முன்னதாக மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா பட்ஜெட்டை மேயரிடம் அளிக்க அதனைப் பெற்றுக் கொண்ட மேயர், பிறகு முறைப்படி மாமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்தார்.
இதில் பொது நிதி, குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் நிதி, ஆரம்பக்கல்வி நிதி என்ற வகைகைகளில் மொத்த வருவாய் வரவினம் ரூ.834 கோடியே 26 லட்சம் என்றும், மூலதன வரவினம் ரூ.1,483 கோடியே 71 லட்சம் என்றும், மொத்தமாக ரூ.2,317 கோடியே 97 லட்சம் வருவாய் மற்றும் மூலதன வரவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், மொத்த வருவாய் செலவினம் ரூ.718 கோடியே 60 லட்சம் என்றும், மூலதன செலவினம் ரூ.1,618 கோடியே 68 லட்சம் எனவும், மொத்தமாக வருவாய் மற்றும் மூலதனச் செலவுகள் ரூ.2,337 கோடியே 28 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ரூ.19 கோடியே 31 லட்சம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி துணை மேயர் வெற்றிசெல்வன் மற்றும் கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் பட்ஜெட் தாக்கலின் போது உடனிருந்தனர்.பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு மாலை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அதிமுக கவுன்சிலர்கள் 3 பேர் பட்ஜெட் மீதான விவாதத்தை புறக்கணித்தனர்.