February 28, 2023 தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டத்தில் தொடர்ந்து பல தடவை மனு வழங்கியும் நடவடிக்கை எடுக்காமல் அலை கழிப்பதாக தி.மு.க.கட்சியை சேர்ந்த உறுப்பினர் அதிருப்தி தெரிவித்தார்.
கோவை மாநகராட்சியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையில் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம்.அதன்படி இன்று கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.மாநகராட்சி மேயர் கல்பனா தலைமையில் நடைபெற்ற குறை தீர்ப்பு கூட்டத்தில்,அவர் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று வந்தார்.
இந்நிலையில் கோவை சுந்தராபுரம், குறிச்சி பகுதியை சேர்ந்த சிதம்பரம் என்பவர் திடீரென தாம் பல தடவை மனு வழங்கியும் இது வரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை எனவும்,இதற்கு அதே பகுதியை சேர்ந்த கவுன்சிலரின் கணவரே காரணம் என குற்றம் சாட்டினார்.மனுவை பெற்று கொண்ட மேயர் கல்பனா மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மனுதாரர் சிதம்பரம் கூறுகையில்,
தமது காலி இடத்தில் பல ஆண்டுகளாக சாக்கடை நீர் ஓடுவதாகவும்,இது குறித்து பல முறை புகார் அளித்தும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவித்தார்.