November 12, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் விரைவில் மிதிவண்டி பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஜெர்மனி நாட்டின் தன்னார்வ அமைப்புடன் ஒன்றிய அரசு இணைந்து இந்தியாவில் ஒடிசா, கொச்சி, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை கிராஸ்கட் சாலையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சோதனை ஒட்டமாக 1.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு மிதிவண்டி செல்வதற்காக பிரத்யேக பாதை மற்றும் நடைபாதைகளில் மக்கள் செல்வதற்காக வண்ண நடைபாதை, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஓவியங்கள் போன்றவை அமைக்கப்பட்டன.
இந்த பாதைகள் சோதனை ஓட்டமாக 10 நாட்களுக்கு மக்கள் பயன்படுத்தினர். இதனிடையே, மாநகராட்சி சார்பில் நிரந்தரமாக இப்பாதைகள் அமைத்து மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட உள்ளன.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
கோவை மாநகரில் நெரிசல் நிறைந்த பெரியகடை வீதி, ராஜவீதி, வடவள்ளி, துடியலூர், சாய்பாபா காலனி போன்ற இடங்களில் இத்திட்டம் விரைவில் மிதிவண்டி பாதை நடைமுறைப்படுத்தப்பட உள்ளன என்றார்.