March 3, 2022 தண்டோரா குழு
தமிழகம் முழுவதும் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது.கோவை மாநகராட்சியை பொறுத்தவரையில் 100 வார்டுகளில் திமுக கூட்டணி 96 இடங்களிலும், அதிமுக 3 இடங்களிலும், எஸ்.டி.பி.ஐ ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.
இதையடுத்து,வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்கள் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் பதவி ஏற்று கொண்டனர். இதற்கிடையில் கோவை மாநகராட்சியின் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் கோவையின் முதல் பெண் மேயர் யார் என்ற கேள்வி எழுந்தது.
மாநகராட்சியின் மேயருக்கான மறைமுக தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்த நிலையில் கோவை மாநகராட்சியின் மேயர் மற்றும் துணை மேயர் வேட்பாளர்கள் குறித்து திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.அதன்படி, கோவை மாநகராட்சியின் மேயர் வேட்பாளராக 19 வார்டில் வென்ற கல்பனாவும், துணை மேயராக 92வார்டில் வெற்றி பெற்ற வெற்றிச்செல்வனும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வெற்றிச்செல்வன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் சொந்த வார்டில் அதிமுக வேட்பாளரை தோற்கடித்து வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.