March 9, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மிதிவண்டிகளின் தற்போதைய பயன்பாடு குறித்து இணைய தளம் மூலமாக கருத்துகள் கேட்கப்பட உள்ளதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கோவை மாநகராட்சிப் பகுதியில் உள்ள உக்கடம் பெரியகுளம், வாலாங்குளம், குறிச்சி குளம் உள்ளிட்ட மாநகர் பகுதிகளில் உள்ள குளக்கரைகளில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் மிதிவண்டி ஓடுதளங்கள், நடைப்பயிற்சித் தளங்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் மிதிவண்டி இயக்குவதற்கான வசதிகள், இடையூறுகள் குறிந்து அறிந்து கொள்ளும் விதமாக, மாநகராட்சி சார்பில், இணைய தளம் மூலமாக கருத்துக் கேட்பு பல மாதங்களுக்கு முன் கேட்கப்பட்டது. பின்னர் கிடப்பில் போடப்பட்டது. இதனிடையே மீண்டும் கருத்துகேட்பு திட்டம் துவங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் மீண்டும் கோவை மாநகர் பகுதிகளில் மாநகராட்சி மூலமாக மக்களின் பயன்பாட்டிற்காக மீண்டும் மிதிவண்டிகள் பயன்படுத்தும் திட்டம் துவங்க வாய்ப்புகள் உள்ளன.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘கோவை மாநகர் பகுதிகளில் மிதிவண்டி ஓடுதளங்கள் அமைக்க சாத்தியக் கூறுகள் உள்ளனவா? என்பது குறித்து, ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவை மாநகரில் மிதிவண்டிகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாகவும், இடையூறுகளை அறிந்து கொள்ளவும் மிதிவண்டிகளின் பயன்பாடு குறித்த கருத்துக் கேட்பு, இணைய தளம் மூலம் விரைவில் துவங்கப்படும்,’’ என்றார்.