April 11, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி விக்டோரியா ஹாலில் மாமன்ற கூட்டம் மேயர் கல்பனா தலைமையில் மாநகராட்சி ஆணையர் முன்னிலையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து கட்சி மாமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்ட நிலையில் அதிமுக உறுப்பினர்களான சர்மிளா சந்திரசேகர், பிரபாகரன், ரமேஷ் ஆகியோர் தமிழக அரசின் சொத்து வரி உயர்விற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர்.
முன்னதாக கூட்டம் நடைபெறும் விக்டோரியா ஹால் முன்பு, மூவரும் மாநகராட்சியின் 100 சதவீத வரி உயர்வுக்கு எதிராக கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.பின்னர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.தொடர்ந்து மாநகர பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொது சுகாதாரப்பணிகள் குறித்து பேசிய திமுக உறுப்பினர்கள் கடந்த ஆட்சியை குறித்து விமர்சித்தனர்.
அப்போது குறுக்கிட்ட அதிமுக மாமன்ற உறுப்பினர் பிரபாகரன்,திமுக வரி விதிப்பு குறித்து பேசினார்.கடுமையான வரி விதிப்பால் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் எனவே அதிகப்படியான வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்திய போது திமுக கவுன்சிலர்கள் சிலர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
மேலும் சில உறுப்பினர்கள் அதிமுக உறுப்பினரை திடீரென தள்ளி விட்டதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாமன்ற அதிமுக குழு தலைவர் பிரபாகரன்,
கோவை மாநகராட்சி வரலாற்றில் இல்லாத அளவிற்கு 100 சதவீதம் வரியை உயர்த்தியுள்ளதாகவும் அதனை தட்டி கேட்ட அதிமுக உறுப்பினர்களை தாக்க முற்படுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் தனியார் பைனான்ஸ் நிறுவன ஊழியர்களை போல் மக்களை மிரட்டி வரி வசூல் செய்கின்றனர்.
கடந்த ஓராண்டில் மட்டும் 350 கோடி ரூபாய் வரி வசூல் செய்துவிட்டு தற்போது நிதி இல்லை என கூறினால் வசூலித்த நிதி என்னவாயிற்று?. 100 வார்டுகள் கொண்ட கோவை மாநகராட்சியில் மூன்று உறுப்பினர்கள் மட்டுமே அதிமுக என்பதால் தங்களை அடக்கி ஒடுக்க திமுக உறுப்பினர்கள் முயல்கின்றனர். ஆனால் அடக்குமுறைக்கு அஞ்ச மாட்டோம் என தெரிவித்தார்.