January 24, 2022 தண்டோரா குழு
ஞாயிறு முழு ஊரடங்கை முன்னிட்டு காலை முதல் மாலை வரை கோவை மாநகர பகுதிகளில் காவல்துறையினர் நடத்திய வாகன சோதனையில் 40 வழக்குகளும்,மாவட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட வாகன சோதனை மற்றும் ரோந்து பணி மூலம் 736 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கொரோனா பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு மூன்றாவது வாரமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கோவையில் தினசரி பாதிப்பு என்பது அதிகரித்து வரக்கூடிய நிலையில் 3 ஆயிரத்து 912 பேர் பெரும் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.இந்த நிலையில் ஞாயிறு முழு ஊரடங்கையொட்டி கோவையில் உணவகங்களில் பார்சல் வழங்கவும் மருந்தகங்களை திறந்து வைக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.
மேலும் அனைத்து கடைகளும் அடைக்க உத்தரவிட்டிருந்த நிலையில் முழு ஊரடங்கு காலை முதல் அமலில் இருந்தது. ஆனால் மாலை 6 மணிக்கு மேல் முக்கிய சாலைகளில் சற்றே வாகன போக்கு வரத்து அதிகரித்தது. குறிப்பாக ரேஸ்கோர்ஸ் மற்றும் ஆர்எஸ் புரம் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் சிலர் நடைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.இதனிடையே காவல்துறையினர் வாகனக் தணிக்கை மேற்கொண்டு உரிய காரணங்கள் இன்றியும் மாஸ்க் அணியாமலும் வாகனத்தில் வருவோருக்கு அபராதம் விதித்து வழக்கு பதிவு செய்தனர்.
அதன்படி கோவை மாவட்டத்தில் நாற்பத்தி ஒரு தற்காலிக சோதனைச்சாவடிகள் மற்றும் 19 நிரந்தர சோதனைச் சாவடிகளில் நடத்தப்பட்ட வாகன தணிக்கையில் சுமார் 736 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதேபோல் கோவை மாநகர பகுதிகளில் காலை முதல் மாலை 7 மணி வரை 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் அதிகாலை 5 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் காவல்துறையினர் தொடர் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.