May 5, 2022 தண்டோரா குழு
கோவையில் கடந்த 1997ஆம் ஆண்டு காவலர்களாக பணியில் சேர்ந்த 137 பேர் உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றுள்ள நிலையில் அவர்கள் அனைவரும் கோவை மாநகர காவல் ஆணையரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தமிழக காவல் துறையில் கடந்த 1997ஆம் ஆண்டு காவலர்களாக பணிக்கு சேர்ந்தவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்பு உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்றனர். அதில் கோவை மாநகர காவல்துறையில் 25 ஆண்டு காலம் காவலர்களாக இருந்த 137 பேர் உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற்றுள்ள நிலையில் அவர்கள் அனைவரும் மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமாரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய
காவல் ஆணையர் பிரதீப்குமார், இதுவரை தலைமை காவலர்களாக பணியாற்றி தற்போது உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்றுள்ள அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் பதவி உயர்வு பெற்றுள்ள அனைவரும் பொதுமக்களின் புகார்களைப் பெறும்போது எந்தவிதமான சார்பும் இல்லாமல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சீறிய முறையில் தங்கள் பணியை மேற்கொள்வதுடன் தங்களது உடல் நலனிலும் அக்கறை செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதுவரை எந்த ஒரு செயலாயினும் உயரதிகாரிகளின் ஆலோசனையின்பேரில் நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்த சூழலில் இனிமேல் தாங்களாகவே முடிவெடுக்கக் கூடிய நிலைக்கு உயர்ந்துள்ளதாகவும் அப்படி எடுக்கக்கூடிய முடிவுகள் தெளிவானதாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து பதவி உயர்வு பெற்ற உதவி ஆய்வாளர்கள் உடன் மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் ,துணை ஆணையர் உமா உள்ளிட்ட அதிகாரிகள் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.