January 27, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 33 பேரூராட்சிகள், 7 நகராட்சிகள், 228 கிராம ஊராட்சிகள் ஆகியவை உள்ளன. இதில் கிராம ஊராட்சிகளுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஏற்கெனவே நடத்தப்பட்டு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இதை தொடர்ந்து பேரூராட்சிகள், நகராட்சிகள், 100 வார்டுகளைக் கொண்ட கோவை மாநகராட்சி ஆகியவற்றுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது.இதையொட்டி கோவை மாநகராட்சியில் 1,216 வாக்குச்சாவடிகள், 7 நகராட்சிகளில் 230 வாக்குச் சாவடிகள், 33 பேரூராட்சிகளில் 725 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 2,171 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
33 பேரூராட்சிகளில் 67 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. மற்ற வாக்குச்சாவடிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்டறியும் பணியில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.
பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் வழக்கமான எண்ணிக்கையை விட கூடுதல் எண்ணிக்கையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தவும், வெப் காமிராக்கள் அமைத்து கண்காணிக்கவும் தேர்தல் பிரிவினர் திட்டமிட்டுள்ளனர்.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிப் பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் நேற்று மாலை முதல் அமலுக்கு வந்தன. விதிமீறல்களைத் தடுக்க, பல்வேறு பிரிவு அரசு அலுவலர்கள் அடங்கிய 21 பறக்கும்படைகள் அமைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரிவினர் கூறியதாவது:
மாநகராட்சியில் 100 கவுன்சிலர்கள், 7 நகராட்சிகளில் 198 கவுன்சிலர்கள், 33 பேரூராட்சிகளில் 533 கவுன்சிலர்கள் என மொத்தம் 831 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளன.மாநகராட்சியில் 14 லட்சத்து 16 ஆயிரத்து 738 வாக்காளர்கள், 7 நகராட்சிகளில் ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 183 வாக்காளர்கள், 33 பேரூராட்சிகளில் 5 லட்சத்து 50 ஆயிரத்து 699 வாக்காளர்கள் உள்ளனர்.
மாநகராட்சி பகுதிகளில் ஆண் வாக்காளர் மற்றும் பெண் வாக்காளர்களுக்கு என பிரத்யேக வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்படவில்லை. அதேசமயம், 7 நகராட்சிகளில் ஆண் வாக்காளர்கள் மற்றும் பெண் வாக்காளர்களுக்கு என தனித்தனியாக தலா 25 வாக்குச்சாவடிகள் ஒதுக்கப் பட்டுள்ளன.33 பேரூராட்சிகளில் ஆண் வாக்காளர்கள் மற்றும் பெண் வாக்காளர்களுக்கு தலா 135 வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச் சாவடிகளில் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்நிலையில் மாநகராட்சி பகுதி உள்பட மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள அரசியல் கட்சியினரின் சுவரொட்டிகளை அகற்றும் பணியில் உள்ளாட்சி நிர்வாகத்தின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.