November 10, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்படும் காய்ச்சலை தடுக்கும் நடவடிக்கையாக 36 மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் டெங்கு பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் ஊரகப் பகுதிகளில் தினசரி சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு பொது மக்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இதில் நாள்தோறும் 2 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்படுகிறது. ஆனால், பெரும்பாலானவர்களுக்கு பெரியளவில் ஏதும் பாதிப்புகள் ஏற்படுவதில்லை. உயிரிழப்பும் இதுவரை ஏற்படவில்லை.
பருவமழை தீவிரமாகும் போது காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் 12 வட்டாரங்களுக்கும் சேர்த்து 36 சிறப்பு மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுக்கள் தேவைப்படும் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைத்து பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு உள்ளாட்சி அமைப்புகளில் பருவமழை காலங்களில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.