September 25, 2021 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் நாளை 439 தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
கோவை மாவட்டத்தில் இதுவரை 24.50 லட்சம் நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசிகளும், 7.40 லட்சம் நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 12 மற்றும் 19 ஆம் தேதிகளில் நடைபெற்றுள்ள 2 சிறப்பு தடுப்பூசி முகாம்களை தொடர்ந்து, வரும் 26 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம் மாவட்டம் முழுவதும் நடைபெற உள்ளது.
இம்முகாமில் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முகாமுக்காக 878 அங்கன்வாடி பணியாளர்கள், 439 தடுப்பூசி செலுத்துபவர்கள், 200 மேற்பார்வையாளர்கள் மற்றும் 65 வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊரகப் பகுதிகளில் 116 முகாம்களும், பேரூராட்சி பகுதிகளில் 129 முகாம்களும், வால்பாறை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் நகராட்சிப் பகுதிகளில் 43 முகாம்கள், மாநகராட்சி பகுதிகளில் 151 முகாம்கள் என மொத்தம் 439 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முகாமில் தடுப்பூசி செலுத்துவபர்களின் விவரங்கள், உடனடியாக கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, அதற்கான சான்றிதழ் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மெகா தடுப்பூசி முகாமை மக்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.