November 17, 2021 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் இதுவரை 150 இடங்களில் நடைபெற்ற மக்கள் சபை நிகழ்ச்சியின் மூலம் 1 லட்சத்து 41 ஆயிரத்து 351 மனுக்கள் பெறப்பட்டுள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 14, 13, 12, 15, 16, 17, 18, 19, 20 மற்றும் 21 ஆகிய வார்டு பகுதிகளில் நடைபெற்ற மக்கள் சபை நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை நேற்று பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்ததாவது:
தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளிலும், நகராட்சி, பேரூராட்சி என 50 இடங்களிலும் மொத்தம் 150 இடங்களில் நடைபெற்ற மக்கள் சபை நிகழ்ச்சியில் பொதுமக்களை நேரில் சந்தித்து 1 லட்சத்து 41 ஆயிரத்து 351 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. அவற்றில் பாதிக்கும் மேற்பட்ட மனுக்களின் மீது உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது.
மிக விரைவில் மீதமுள்ள மனுக்கள் மீதும் துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்படும். மாவட்டத்தின் அனைத்து துறையைச் சார்ந்த அதிகாரிகளும் கோரிக்கை மனுக்கள் மீது உரிய வகையில் மிக விரைவாக ஆராய்ந்து நடவடிக்கை எடுத்து அரசின் உத்தரவுகளை பெற்றுத்தருவார்கள்.
கோவை மாநகராட்சி பகுதிகள் முழுவதும் கணக்கெடுக்கப்பட்டு 2 நாட்களுக்கு ஒருமுறை சீரான குடிநீர் விநியோகம் செய்யும் அளவிற்கு சிறப்பு திட்டம் அமைக்கப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளது. பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படாமல் உள்ளன. இப்பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தக் கூடிய திட்டங்கள் ஆண்டு வாரியாக பிரித்தெடுத்து கணக்கெடுக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சிக்குட்பட்ட பழுதடைந்த சாலைகள் விரைவில் புதுப்பிக்கப்பட்டு தீர்வு காணப்படும். கோவை மாவட்டத்தில் விடுபட்ட அனைவருக்கும் முதியோர் உதவித் தொகை வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் ராஜ கோபால் சுன்கரா, துணை கமிஷனர் ஷர்மிளா, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி, முன்னாள் பேரூராட்சி தலைவர் பையா கிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக், முன்னாள் மேயர் கணபதி ப. ராஜ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
____