April 14, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:
கொரோனாவால் இறந்த நபர்களின் வாரிசுகளுக்கு உச்சநீதிமன்ற வழிக்காட்டுதலின்படி நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.கோவை மாவட்டத்தில் இதுவரை 5,624 மனுக்கள் பெறப்பட்டு 3,778 பேருக்கு ரூ.50 ஆயிரம் வீதம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் 1,187 மனுக்கள்,இருமுறை பெறப்பட்ட மனு மற்றும் இதர காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் வழிகாட்டுதலின் படி 20.03.2022-க்கு முன்னர் ஏற்பட்ட கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் 60 நாட்களுக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும். 20.03.2022 முதல் ஏற்படும் கொரோனா இறப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் இறப்பு நிகழ்ந்த 90 தினங்களுக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நிர்வாகம் 30 தினங்களுக்குள் தீர்வு காண வேண்டும். இக்காலக் கெடுவிற்குள் நிவாரணம் கோரி மனு சமர்ப்பிக்க இயலாதவர்கள் அது குறித்து கோவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்து கொள்ளலாம்.இம்மனுக்கள் மீது மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு பரிசீலனை செய்து தீர்வு செய்யும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.