January 17, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் கடந்த 4-ம் தேதி முதல் பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது வரை 92 சதவீதம் பேருக்கு பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வழங்கல் அதிகாரி கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் கவுண்டம்பாளையம், பச்சாபாளையம் உள்பட 9 இடங்களில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்குகளில் இருந்து, 1045 ரேஷன் கடைகளுக்கு இட வசதிக்கு ஏற்ப பொருட்கள் கொண்டு வரப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வந்தன. தற்போது அந்த பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.
கோவை மாவட்டத்தில் 1,405 ரேஷன் கடைகளில் சுமார் 11 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்களில் 10 லட்சத்து 78 ஆயிரத்து 484 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு பெற தகுதியானவர்கள் ஆவர். இவர்களில் இதுவரை சுமார் 9 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு பொங்கல் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. அதாவது 92 சதவீதம் பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களுக்கும் விரைவில் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.