January 27, 2023
இந்து சமய அறநிலைத்துறை கோவை மாவட்ட அறங்காவல் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கோனியம்மன் கோவிலில் பதவியேற்று கொண்டனர்.
இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டத்தின் கீழ் இந்து சமய திருக்கோயில்களின் நிர்வாகத்தை மேலாண்மை செய்வதற்காக பரம்பரை நிர்வாகத்தில் இல்லாத ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் பரம்பரை அல்லாத அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். இவ்வாறு அமைக்கப்படும் ஒவ்வொரு அறங்காவலர் குழுவிலும் மூன்று அறங்காவலர்களுக்கு குறையாமலும்ஐந்து அறங்காவலர்களுக்கு மிகாமலும் உறுப்பினர்கள் இடம்பெற வேண்டும்.
இக்குழுவில் பெண் உறுப்பினர் ஒருவரும் ஆதிதிராவிடர் அல்லது பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த உறுப்பினர் ஒருவரும் இடம் பெற வேண்டும். இக்குழுவின் பதவிக்காலம் இரண்டாண்டுகள் ஆகும். திருகோயில்களில் அறங்காவலர் நியமனம் செய்வதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை தொடங்கியுள்ளது.தற்போது, ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கும் கீழே உள்ள கோவில்களில் அறங்காவலர் பதவிகள் நியமனம் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கோவிலுக்கும் தலா 5 பேர் கொண்ட அறங்காவலர் குழு நியமிக்கப்பட உள்ளது.
இதன் முக்கிய தகுதிகளாக குழுவில் உள்ளவர்கள் இந்து சமயத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும்.25 வயதிற்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். ஆன்மீக நம்பிக்கை கொண்டவராக இருக்க வேண்டும்.
இதன்படி கோவையில் இந்து சமய அறநிலைத்துறை கோவை மாவட்ட அறங்காவல் குழு தலைவராக ராஜா என்ற ராஜாமணி, அறங்காவலர் குழு உறுப்பினர்களாக எஸ்.எம்.டி. கவிதா கல்யாணசுந்தரம்,ர.கர்ணபூபதி, தனபால், செந்தில்குமார் ஆகியோர் கோணியம்மன் திருகோவில் மண்டபத்தில் பதவியேற்றுக் கொண்டனர். கோனியம்மன் கோவில் இந்து சமய அறநிலைத்துறை துணை கமிஷனர் கருணாநிதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நா.கார்த்திக், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி உள்ளிட்டோர் இந்நிகழ்வுக்கு தலைமை வகித்தனர்.மேலும் இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள்,அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.