December 27, 2021 தண்டோரா குழு
கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த அம்சா நகர் பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பத்தாண்டுகளாக அப்பகுதியில் வசித்து வரும் நிலையில் தற்போது அவர்களை காலி செய்ய சொல்லி அதிகாரிகள் மிரட்டுவதாகவும் பலமுறை அதிகாரியிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
எங்கள் பகுதிக்கு குடிநீர் வினியோகம் இருக்கும் போதும் இதுவரை மின்சார வசதியும் மற்றும் அடிப்படைத் தேவைகள் எதுவும் செய்து தரப்படவில்லை எனவும் இலவச வீட்டுமனை பட்டாவும் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் இதுகுறித்து கலெக்டரிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் இந்நிலையில் வீடுகளை காலி செய்ய வலியுறுத்தி அதிகாரிகள் மிரட்டி நோட்டீஸ் ஓட்டி வருவதாக கூறி சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
தங்களுக்கு வேறு இடம் தருவதாக அரசு அதிகாரிகள் கூறினாலும் அந்த இடம் வனப்பகுதிக்குள் இருப்பதால் தங்களால் செல்ல இயலாது எனவே தாங்கள் இருக்கும் இடத்திலேயே நாங்கள் வசித்து கொள்கிறோம். எங்களை காலி செய்ய கூறவேண்டாம் என தெரிவித்தனர். இருக்கின்ற இடத்திற்கு பட்டா வழங்க வழிவகை செய்ய வேண்டுமென சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.
அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின் போராட்டத்தை கைவிட்டனர்.