September 14, 2021 தண்டோரா குழு
தற்கொலை எண்ணங்களை தடுக்கும் வகையில் கோவை மாவட்ட காவல்துறை சார்பில் விடியல் உதவி மையம் இன்று துவங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் பதிவு செய்யப்படும் இறப்பு வழக்குகளில், 50 சதவீத வழக்குகள் தற்கொலை வழக்குகளாக உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் கோவை மாவட்டத்தில் தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவ்வாறு தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர்களை அந்த எண்ணத்தில் இருந்து மீட்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல்துறை சார்பில் விடியல் என்ற உதவி மையம் துவங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற மையத்தின் துவக்க விழாவில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரதினம் கலந்து கொண்டு மையத்தை துவக்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
கோவை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 951 இறப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது இதில் 480 க்கு மேல் தற்கொலைகளாக உள்ளது. கடந்த ஆண்டு 1300 இறப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் 650 வழக்குகள் தற்கொலை வழக்குகளாக பதிவு செய்யப்பட்டன. இதில் பெரும்பாலானவர்கள் குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்பது எங்களது ஆய்வில் தெரியவந்தது.
பிரச்சனைகள் எழும் நேரத்தில் நொடிப்பொழுதில் அவர்கள் எடுக்கும் முடிவு வாழ்க்கையை மாற்றி விடுகிறது. அத்தகைய எண்ணத்தில் இருந்து மீட்க விடியல் என்ற 24 மணி நேர தொலைபேசி சேவை துவக்கப்பட்டுள்ளது. தற்கொலை எண்ணம் தோன்றுபவர்கள் 04222300999 என்ற தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.இந்த தொலைபேசி அழைப்புகளை எடுக்க சுழற்சி முறையில் 8 காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஒரு காவலர் இதற்கான பணியில் இருப்பார். இதற்காக துறை சார்ந்த வல்லுனர்களிடம் மூன்று நாள் பயிற்சி எடுத்துள்ளனர்.இதுதவிர மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்சனை உள்ளவர்களும் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். மேலும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்கள் அரசின் திட்டங்களை அறிந்து கொண்டு பயன் பெறுவதற்காகவும் இந்த காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது இதுதொடர்பான சந்தேகங்களுக்கும் இந்த உதவி மையத்தை அழைக்கலாம் என்றார்.