April 30, 2023 தண்டோரா குழு
கோவை பன்னீர் செல்வம் பூ மார்க்கெட்டின் முன்புறமுள்ள முதன்மையான 16 அடி வழித்தடத்தை அடைத்து புதியதாக மேடைக்கடைகள் கட்டுவதை கைவிடக்கோரி மாநகராட்சி ஆணையாளரிடம் மனு வழங்க உள்ளதாக கோவை மாவட்ட மலர் வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள பன்னீர் செல்வம் பூமார்க்கெட்டில் மலர் வியாபாரம் செய்து வரும் வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட மலர் வியாபாரிகள் சங்க ஆலோசணை கூட்டம் அதே பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் UVS. செல்வகுமார் தலைமையில் நடை பெற்ற இதில் கௌரவ அழைப்பாளராக, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் கோவை மாவட்ட தலைவர், இருதயராஜா கலந்து கொண்டு ஆலோசணைகளை வழங்கினார்.
இதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய மலர் வியாபாரிகள் சங்க தலைவர் செல்வகுமார்,
பன்னீர் செல்வம் பூ மார்க்கெட்டில் மாநாகராட்சி சார்பாக மராமத்து பணிகள் நடைபெற்று வருகிறது. அது சமயம் மார்ககெட்டின் முன்புறமுள்ள முதன்மையான 16 அடி வழித்தடத்தை அடைத்து புதியதாக மேடைக்கடைகள் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும்,இதனால் பூக்கள் வாங்க வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாக வாய்ப்புகள் இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் இதனால் வியாபரிகளும் பாதிப்படைவதாக கூறிய அவர், புதியதாக கடைகளை கட்டுவதை தவிர்த்து பழைய வழி தடத்தையே வழங்குமாறு மாநகராட்சி நிர்வாகத்தை கேட்டுக் கொள்ள மாநகராட்சி ஆணையாளரிடம் மனு வழங்க உள்ளதாக தெரிவித்தார்..பழைய நுழைவு வாயிலின் அருகே இருந்த மின்சார அறையை இடித்து அதற்கு மேல்புறம் 2 கடைகளை மறைத்த மாதிரி புது மின்சார அறை கட்டுவதை நிறுத்தி மின் அறையை பழைய இடத்திலேயே அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்..மேலும் இது போன்ற பிரச்னைகளால் மலர் வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருப்பதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.
இந்த ஆலோசனை கூட்டத்தி்ல், கோவை மாவட்ட மலர் வியாபாரிகள் சங்கத்தின் பல்வேறு நிலை நிர்வாகிகள் முஸ்தபா ஐயப்பன் ஷாஜகான்,ஜெயகுமார், அலாவுதீன், காஜா,செய்தி தொடர்பாளர் ரோஸ் பரூக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.