August 31, 2022
தண்டோரா குழு
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை அருள்மிகு முந்தி விநாயகர் கோயிலில் நான்கு டன் மலர்களால் விநாயக பெருமானுக்கு மாப்பிள்ளை ராஜ அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.
கோவை புலியகுளம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு முந்தி விநாயகர் திருக்கோவில் ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் சிலை அமைந்துள்ள திருக்கோவில்.19 அடி உயரம் 10 அடி அகலத்துடன் சுமார் 190 டன் எடை கொண்ட விநாயக பெருமானுக்கு இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அதிகாலை முதல் அபிஷேகம் நடத்தப்பட்டது.
சுமார் ஒன்றரை மணி நேரம் அபிஷேகம் செய்யப்பட்டு பின்னர் சுமார் நான்கு டன் எடையில் பல்வேறு வகை மலர்களால் விநாயக பெருமானுக்கு சிறப்பு மாப்பிள்ளை ராஜ அலங்காரம் செய்யப்பட்டதுடன் 36 வகை நெய்வேத்தியங்களுடன் வழிபாடு நடத்தப்பட்டது.அதிகாலை 5 மணி முதல் நடைபெற்று வரும் அபிஷேக அலங்காரத்தை காண அதிகாலை மூன்று மணி முதலே கோவிலில் குவிந்த பக்தர்கள் ஐந்து மணி நேரம் காத்திருந்து அருள்மிகு விநாயக பெருமானின் அருள் பெற்றனர்.