June 21, 2023 தண்டோரா குழு
கோவை ராஜவீதியில் லாரிமூலம் கொண்டு வரப்பட்ட தடை செய்யப்பட்ட 1.5 டன் பிளாஸ்டிக் கவர்களை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கோவையில் மாநகராட்சி கமிஷனர் உத்தரவின் பேரில் கோவை மாநகராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.குறிப்பாக பல்வேறு கடைகள், சாலையோர கடைகளில் மாநகராட்சி அதிகாரிகள் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சேலத்தில் இருந்து லாரி மூலம் கோவைக்கு கொண்டு வரப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை ரகசிய தகவலின் அடிப்படையில் ராஜவீதியில் டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அதில் ஒன்றரை டன் பிளாஸ்டிக் கவர்கள் இருப்பது தெரியவந்தது. அவற்றை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து, இந்த பிளாஸ்டிக் கவர்கள் யாருக்கு அனுப்பப்படுகிறது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.