June 11, 2022 தண்டோரா குழு
கோவை ராமநாதபுரம் மற்றும் கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு மேம்பாலங்களை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
முன்னதாக கவுண்டம்பாளையம் பகுதியில் ஏராளமான அதிமுகவினர் திரண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி திறப்பு விழா நடத்த இருந்ததால் காவல்துறையினர் குறிக்கப்பட்ட பெரும் பரபரப்பு நிலவியது.
கோவை -திருச்சி சாலை இராமநாதபுரம் மற்றும் கோவை-மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் கடந்த 2019 ம் ஆண்டு மேம்பாலங்கள் கட்டும் பணி துவங்கப்பட்டு 24 மாதங்கள் பணிக்காலமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. திருச்சி சாலையில் சுமார் 3.15 கி.மீ தூரத்திற்கு
238 கோடி மதிப்பீட்டிலும், மேட்டுப்பாலையம் சாலை கவுண்டம்பாளையம் பகுதியில் 1.175 கி.மீ தூரத்திற்கு 66 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்ட மேம்பால பணிகள் நிறைவடைத்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் இரு பாலங்களையும் திறந்து வைத்தார்.
கோவை இராமநாதபுரம் பகுதியில் நடைபெற்ற பாலம் திறப்பு விழா நிகழ்வில் தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ( சிபிஎம்) கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் (பா.ஜ.க), கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் அர்ஜூனன் (அதிமுக ), கோவை சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ கே.ஆர்.ஜெயராமன் (அதிமுக) ,கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆகியோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் திமுக, பாஜ.க தொண்டர்கள் மாறி மாறி கோஷம் எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் ஸ்டாலின் பாலங்களை திறந்து வைத்தார்.அதை தொடர்ந்து மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் கொடியசைத்து வாகனங்களை அனுப்பி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
கோவை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக இந்த பாலபணிகளை தமிழக அரசு விரைவு படுத்தி பணிகளை முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்து இருப்பதாகவும், மாவட்டத்தின் ஓட்டு மொத்த வளரச்சிக்கு இந்த பாலங்கள் பயனுள்ள வகையில் இருக்கும் எனவும் தெரிவித்தார்.
பின்னர் பேசிய கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்,
திமுக, பா.ஜ.க, அதிமுகவை சேர்ந்தவர்கள் இணைந்து இந்த பாலத்தை திறந்து வைத்திருப்பது மகிழ்ச்சி எனவும், மாவட்டத்திற்கு இன்னும் பல இடங்களில் பாலங்கள் தேவை எனவும் தெரிவித்ததுடன் நெரிசல் மிகுந்த இடங்களை கண்டறிந்து பாலங்கள் அமைக்கவும் , மெட்ரோ ரயில் திட்டத்தை அமல்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் மேம்பாலம் திறப்பு விழாவிற்காக பாலம் முழுவதும் வாழை மரங்கள் கட்டப்பட்டு திமுக கொடிகளும் கட்டப்பட்டிருந்தன. மேலும் விழாவிற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி வருவதையொட்டி திமுகவினர் திரண்டிருந்த வேளையில் கவுண்டம்பாளையம் மற்றும் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்களான அதிமுகவைச் சேர்ந்த பி.ஆர்.ஜி. அருண்குமார் மற்றும் ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்டோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் திரண்டு தாங்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்க இருப்பதாக கூறியதால் கவுண்டம்பாளையம் பகுதியில் பரபரப்பு நிலவியது.
இதைத்தொடர்ந்து காவல்துறையினர் சட்டமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் அமைச்சர் செந்தில்பாலாஜி கொடியசைத்து வாகன போக்குவரத்தை துவக்கி வைத்ததற்கு பிறகு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மேம்பாலம் முன்பாக வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
தொடர்ந்து மேம்பாலத்தில் சிறிது தூரம் நடந்து சென்றும் ஆய்வு மேற்கொண்டனர். திமுகவினர் மற்றும் அதிமுகவினர் தனித்தனியே நிகழ்ச்சி நடத்தியதால் கவுண்டம்பாளையம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு பெரும் பரபரப்பு நிலவியது.