December 1, 2021 தண்டோரா குழு
கோவை விமான நிலையத்தில் சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் ரூ.31 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான 640 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்யப்பட்டது.
கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து உள்ளதால் கோவையில் இருந்து சார்ஜா உள்பட பல்வேறு இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் சார்ஜாவில் இருந்து கோவைக்கு ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் ஒருவர் பின் ஒருவராக விமான நிலையத்தை விட்டு வெளியேறினர்.
அப்போது ஒரு வாலிபரின் நடவடிக்கை சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்தது. இதையடுத்து சுங்க துறை அதிகாரிகள் அந்த நபரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.இதில் அந்த நபர் முன்னணுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அவரை போலீசார் சோதனை செய்தனர்.மேலும் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஸ்கேன் செய்து பார்த்தனர். இதில் வயிற்றில் நீள்வட்ட வடிவில் 3 உருண்டைகள் இருப்பது தெரிந்தது.
இதனைதொடர்ந்து டாக்டர்கள் உதவியுடன், அந்த உருண்டையை வெளியே எடுத்தனர். பின்னர் அதனை சோதனை செய்து பார்த்த போது தங்கத்தை பேஸ்ட் வடிவில் பாலித்தின் கவரில் அடைத்து, பின்னர் அதனை மாத்திரை போல் முழுங்கியது தெரியவந்தது.இதையடுத்து சுங்க துறை அதிகாரிகள் அந்த 32 வயது வாலிபரை கைது செய்தனர். மேலும் அவர் கடத்தி வந்த ரூ.31 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பிலான 640 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.