January 3, 2024 தண்டோரா குழு
கோவை விழாவை முன்னிட்டு போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள காந்தி நினைவகம் வளாகத்தில் சர்வ மத பிரார்த்தனை நடைபெற்றது.
கோயம்புத்தூர் விழாவின் முக்கிய நிகழ்வான ஒருமை பயணம் , கோயம்புத்தூரில் உள்ள 20 மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த 120 மாணவர்களை கோயம்புத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு வழிபாட்டுத் தலங்களுக்கு அழைத்துச் சென்று,அனைத்து மதங்களை புரிந்து கொள்ளவும்,மதங்களின் மீதான அவர்களின் மதிப்பை வளர்க்கவும், பல்வேறு மத நம்பிக்கைகளை உணரவும் கோயம்புத்தூர் விழா குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
காலையில் புனித மைக்கேல் தேவாலயத்தில் இருந்து பயணத்தைத் தொடங்கிய மாணவர்கள்,பின்னர் அருள் மிகு கோனியம்மன் கோயில், அத்தர் ஜமாத் மசூதி, குருத்வாரா சிங் சபா மற்றும் ஜெயின் கோயில்களுக்குச் சென்றனர்.
இந்தப் புனிதத் தலங்களுக்கு சென்ற அவர்களின் பயணத்தில் மாணவர்கள் ஒவ்வொரு மதத்தின் பழக்கவழக்கங்களின்படி வரவேற்கப்பட்டனர், மேலும் அந்தந்த மதங்களின் ஆன்மீகத் தலைவர்கள் அவர்கள் பின்பற்றும் கொள்கைகளையும் அவர்களின் வழிபாட்டு முறைகளையும் பகிர்ந்து கொண்டனர்.
வேற்றுமையில் ஒற்றுமையை போற்றும் வகையில் போதனூரில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அணைத்து மதத்தினரும் பங்கேற்ற பிரார்த்தனை கூட்டத்துடன் இந்த பயணம் முடிவடைந்தது.
மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிறைவு விழாவில் பேரூர் ஆதீனம் மருதாச்சல அடிகளார், ஏ.ஜே.ராஜா, கோவை பகுதி தலைவர் சிஎஸ்ஐ கோவை மறைமாவட்டம், அப்துல் ஹக்கீம், ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு பள்ளியின் மாணவர்-பிரதிநிதிகளும் தாங்கள் கற்றுக்கொண்டதை வெளிப்படுத்தினர்.மாணவர்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கிய கோவை விழா குழுவினரை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி பாராட்டினார்.மேலும் ,பல்வேறு மொழி,மதம்,கலாசாரம் உள்ளவர்களும் ஒற்றுமையாக வாழ முடியும் என்பதை இந்தியா மற்ற நாடுகளுக்குக் காட்டியது என்று அவர் கூறினார். மாணவர்கள் பன்முகத்தன்மையைப் பாராட்டவும், அனைத்து மதங்களையும் மதிக்கவும், அவர்கள் வழிபாட்டு முறைகளையும் தெரிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும்.
நிகழ்ச்சி முடிவில் சர்வ சமயப் பிரார்த்தனை நடைபெற்றது.இதில் அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டனர்.