May 26, 2022 தண்டோரா குழு
கோவை – ஷீரடி தனியார் சுற்றுலா ரயில் சேவை, ஜூன் மாதத்தில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் சார்பில்( ஐ.ஆர்.சி.டி.சி) கோவை, சென்னை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வடமாநிலங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவது வழக்கம்.
இந்நிலையில், தென்னக ரயில்வே சார்பில் தனியார் மூலம் ரயில்வே சேவையை துவங்கி, சுற்றுலா அழைத்துச் செல்ல திட்டமிடப்பட்டது. அதன்படி, ஆன்மிகச் சுற்றுலா அழைத்து செல்ல ஒப்பந்த அடிப்படையில் பணம் செலுத்தி, ரயில்களை இயக்க தனியார் அமைப்புகள், நிறுவனங்கள் முன்வரலாம் என ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி கோவையில் இருந்து ஷீரடிக்கு சுற்றுலா ரயிலானது தனியார் நிறுவனம் மூலமாக இயக்கிட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில்,
‘‘பிரதமரின் \”பாரத் கவுர்\” என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள 5 நகரங்களில் இருந்து தனியார் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. அதில் கோவையும் ஒன்றாகும்.
இரண்டு அடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட இந்த ரயிலை கோவையில் இருந்து ஷீரடிக்கு, கோவையை சேர்ந்த தனியார் நிறுவனம், ஒப்பந்த அடிப்படியில் இயக்கிட ரயில்வே துறைக்கு உரிய தொகையை செலுத்தியுள்ளது. மே 17 ஆம் தேதி முதல் இந்த ரயிலை இயக்கத் திட்டமிடப்பட்டது.ஆனால், ரயிலை இயக்குவதற்காக ஏற்பாடுகள் முழுமை பெறாததால்,இந்த ரயிலானது ஜூன் மாதத்தில் இயக்கப்பட உள்ளது. கோவையில் இருந்து ஈரோடு, சேலம், பெங்களூரு மந்த்ராலயம் வழியாக ஷீரடிக்கு இந்த ரயில் இயக்கப்படும்,’’ என்றார்.