February 15, 2022 தண்டோரா குழு
அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு கல்லூரியில் பயில மூன்று வருடங்களுக்கு முழு செலவுகளையும் தான் ஏற்றுக்கொள்வதாக 32வது வார்டில் பாஜக சார்பாக போட்டியிடும் புவனேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் சூடு பிடித்துள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் இம்முறை பா.ஜ.க.தனியாக தேர்தலை சந்தித்து,கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளிலும் பா.ஜ.க.வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.இதில் கோவை மாநகராட்சி 32 வது வார்டில் பா.ஜ.க. வேட்பாளராக தாமரை சின்னத்தில் புவனேஷ்வரன் போட்டியிடுகிறார்.
இவர் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.தாம் வெற்றி பெற்றால்,மத்திய அரசின் திட்டங்களை வார்டு பகுதி மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவேன்,எனவும், அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்வேன் எனவும்,அரசு பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு மேற்படிப்பிற்காக கல்லூரியில் படிக்க மூன்று ஆண்டுகளுக்கு தேவையான முழு செலவகளையும் தான் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்தார்.