January 27, 2022 தண்டோரா குழு
கழிவுநீர் வடிகால்களை சீரமைத்து தருவது உள்ளிட்ட மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தப்படுவதே தனது முதற் பணி என கோவை 63வது வார்டு பகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கவுன்சிலர் வேட்பாளர் ரம்யா வேணுகோபால் உறுதி அளித்துள்ளார்.
மாநகராட்சி தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளும் பம்பரம்போல் சுழன்று வேலை செய்து வருகின்றனர். இதனால் அரசியல் கட்சியினர் மக்களை சந்தித்து வாக்கு கேட்கும் பணியில் அனல் பறக்கிறது. இதன் ஒருபகுதியாக கோவை ஒலம்பஸ் பகுதியை சேர்ந்தவரும்,மக்கள் நீதி மய்யம் கட்சியின் கோவை தெற்கு தொகுதி 63வது வார்டு கவுன்சிலர் வேட்பாளருமான ரம்யா வேணுகோபால் மக்களை சந்தித்து தனது வாக்கு கேட்கும் பணியில் அசுர வேகம் காட்டி வருகிறார்.
இதனை ஒட்டி வீடு வீடாக சென்று மக்களிடம் வாக்கு கேட்டு வருகிறார். இதன் இடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் நேர்மையான அரசியலை முன்னிறுத்தி மக்கள் நீதி மய்யம் கட்சி இத்தேர்தலை சந்திப்பதாக கூறினார்.
மேலும்,63வது வார்டு பகுதியில் இருக்க கூடிய கழிவுநீர் செல்லக்கூடிய வடிகால்களை சீரமைத்து தருவது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தருவதாக உறுதி அளித்தே மக்களிடம் வாக்கு கேட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.