March 30, 2017 தண்டோரா குழு
உத்தர பிரதேஷ மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு தர அமைக்கப்பட்ட ‘அன்ட்டி ரோமியோ படை’ வாலிபர்களுக்கு தொல்லை தரும் படையாக மாறியுள்ளது.
உத்தர பிரதேஷ மாநிலத்தின் ராம்பூர் மாவட்டத்தில் ஒரு இளைஞன் தன் சகோதரியுடன் மருந்து வாங்க தங்கள் கிராமத்திலிருந்து ராம்பூர் நகருக்கு வந்துள்ளனர். மருந்து வாங்கிவிட்டு சாலையின் ஓரத்தில் அமர்ந்திருந்தனர். அங்கு வந்த இந்த படையினர், அவர்கள் இருவருக்கும் தொல்லை தந்துள்ளனர். அதன் பிறகு, இருவரையும் கைது செய்து, வலுக்கட்டாயமாக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவர்கள் தங்கள் உறவை நிரூபித்த பிறகும், அவர்களை வெளியே விட 5௦௦௦-ரூபாய் லஞ்சம் தருமாறு கேட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் தனது கைபேசியில் பதிவு செய்து அதை மூத்த காவல் அதிகாரியிடம் காட்டியுள்ளார். இதை பார்த்த அவர், குற்றம் சாட்டப்பட்ட போலீசாரை பணியிலிருந்து இடைநீக்கம் செய்தார்.
பரேலி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆப் போலீஸ், விஜய் பிரகாஷ் கூறுகையில், “இச்சம்பவம் குறித்து கேள்விப்பட்டேன். சகோதரன் சகோதரியான அந்த இருவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டோம். அப்பாவி மக்களுக்கு தொல்லை கொடுக்கும் போலீசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
உத்தர பிரதேஷ முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இச்சம்பத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.