December 20, 2023 தண்டோரா குழு
சங்கமித்திரா சுற்றுச்சூழல் கல்வி முன்னேற்ற அறக்கட்டளை தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் கடத்தூர் குளக்கரையில் 1701 மரக்கன்றுகள் நடப்பட்டது.
சங்கமித்திரா சுற்றுச்சூழல் கல்வி முன்னேற்ற அறக்கட்டளை தன்னார்வ தொண்டு நிறுவனம்,தமிழ்நாடு அரசு வனத்துறை,ஸ்ரீ ராமகிருஷ்ண பொறியியல் கல்லூரியுடன் இணைந்து அன்னூர் வட்டம் குன்னத்தூர் பஞ்சாயத்து கடத்தூர் குளக்கரையில் 1701மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கீதா தங்கராஜ் தலைமை வகித்தார்.சங்கமித்திரா சுற்றுச்சூழல் கல்வி மற்றும் முன்னேற்ற அறக்கட்டளையின் செயல் இயக்குனர் டி.வி.விஜயகுமார் அனைவருக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கி வரவேற்றார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட தலைவர் முனைவர் R. கேசவசாமி முன்னிலை வகித்தார். ஊர்த்தலைவர் பெ.துரைசாமி நாயுடு, சிவசக்தி சமூக பணி இயக்க செயலாளர் என்.தங்கராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.கடத்தூர் குளக்கரையில் மரக்கன்றுகள் நடும் விழாவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் பி.கருப்பசாமி துவக்கி வைத்து பேசும்போது, சங்கமித்திரா சுற்றுச்சூழல் கல்வி முன்னேற்ற அறக்கட்டளை சிறப்பானதொரு கிராமத்தினை தேர்வு செய்து பராமரிப்பு இன்று இருக்கக்கூடிய கடத்தூர் குளக்கரையில் 1701 மரக்கன்றுகளை நட்டு பூஞ்சோலையாக மாற்றுவதற்கு எடுத்துள்ள முயற்சி என்பது மிகச் சிறப்பான பாராட்டுக்குரிய செயலாகும்.
நாம் நடக்கூடிய மரக்கன்றுகள் எதிர்காலத்தில் நன்கு வளர்ந்து இப்பகுதி முழுவதும் பசுமையான இயற்கைச் சூழ்நிலையை ஏற்படுத்துவதோடு பறவைகள்,பூச்சி இனங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான உயிரினங்களின் புகலிடமாக அமையும் என்பதில் எவ்வித ஐயமுமம் இருக்கமுடியாது. மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டுள்ள நாட்டு நலப் பணித்திட்ட மாணவ, மாணவிகள் முழு ஈடுபாட்டோடும் உற்சாகத்தோடும் பணியாற்றி சுற்றுச்சூழலை பாதுகாக்க உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மரக்கன்றுகள் நடும் பணியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி நாட்டுநல பணித்திட்ட மாணவ, மாணவிகள் 150 க்கும் மேற்பட்டோர் சேவைப் பணியில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில் நாட்டு நல பணித்திட்ட அலுவலர்கள் B.மாரியப்பன் ,P.ஜெயப்பிரகாஷ், J.ஸ்ரீஜா ,முனைவர் S.அல்லிராணி,R. மோகன் குமார் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிறைவாக நாட்டுநலப்பணித்திட்ட தன்னார்வலர் சி.அபர்ணா நன்றி கூறினார்.