April 25, 2025
தண்டோரா குழு
சங்கரா கண் அறக்கட்டளை இந்தியா (Sankara Eye Foundation India) அடுத்த ஆண்டுக்குள் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி மாணவர்களின் கண் பார்வையை இலவசமாக பரிசோதனை செய்து, தேவைப்படும் மாணவர்களுக்கு தக்க சிகிச்சை அளிக்கும் என அந்த அறக்கட்டளையின் நிறுவனரும், நிர்வாக அறங்காவலருமான டாக்டர் ஆர்.வி.ரமணி கூறினார்.
கோயம்புத்தூர் சிவானந்தபுரத்திலுள்ள சங்கரா கண் மருத்துவ மனையில் நவீன லாசிக் லேசர் மையத்தினை மாவட்ட கலெக்டர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் வியாழக்கிழமை (ஏப்ரல் மாதம் 24ம் தேதி, 2025ல்) திறந்து வைத்தார்.
அந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய டாக்டர் ரமணி கூறியதாவது,
“மே மாதம் சங்கரா கண் அறக்கட்டளை இந்தியா தனது 49வது ஆண்டில் காலெடுத்து வைக்கிறது. வானவில் திட்டத்தின் மூலம் அடுத்த ஆண்டுக்குள் இந்த அறக்கட்டளை,கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி மாணவர்களின் கண் பார்வையை இலவசமாக பரிசோதித்து, தேவைப்படும் மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்.
“இதன் மூலம் கண் பார்வை இழக்கும் அபாயம் தவிர்க்கப்படும்.தற்போது நாடு முழுவதும் 14 சங்கரா கண் மருத்துவமனைகள் செயல்படுகின்றன.
அண்மையில் 14வது கண் மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் திறந்து வைத்தார்.பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின் பேரில்,மேலும் ஒரு கண் மருத்துவமனை பீகார் மாநிலம் பாட்னா நகரில் தொடங்கப்படும்.”அதற்கு தேவையான நிலத்தை பீகார் அரசு பாட்னா நகரின் மையப்பகுதியிலேயே கொடுத்துள்ளது.இந்த அறக்கட்டளை இதுவரை 1 கோடிக்கும் மேலான மக்களின் கண் பார்வையை சரி செய்துள்ளது. ஐசிஐசிஐ அறக்கட்டளையின் தலைவர் சஞ்சய் டட்டா இந்த மருத்துவ மனைக்கு கடந்த ஆண்டு வந்தபோது,அதன் சேவைகளை கண்டு வியந்து,அதன் முயற்சிகளை ஊக்குவிப்பதற்கு தேவையான உதவிகளை கொடுப்பதாக உறுதி அளித்தார்.அந்த உறுதியின் வெளிப்பாடு தான் தற்போது தொடங்கப்பட்டுள்ள லேசிக் மையம்,” என்றார் டாக்டர் ரமணி.
மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் தன் உரையில்,
கண் சிகிச்சைக்காக நவீன லேசர் சிகிச்சை வசதியை தொடங்கியதற்காக சங்கரா கண் அறக்கட்டளையை பாராட்டினார். மாநிலம் முழுவதும் இந்த அறக்கட்டளை மிகுந்த அக்கரையுடனும், கருணையுடனும் கண் சிகிச்சை அளித்து வருவதாக கூறினார்.
“இந்த அறக்கட்டளை கண்பார்வை நலத்திற்கான புதிய தரத்தை உருவாக்கியுள்ளது. அதன் சேவை மூலம் குணமடைந்த பயனாளிகள் அதன் சிறப்பினை மாநிலம் முழுவதுமாக மக்களுக்கு பரவலாக எடுத்துச் செல்வார்கள்” என்றார்.
சங்கரா கண் அறக்கட்டளை இந்தியாவின் தலைவர் டாக்டர் எஸ் வி பாலசுப்ரமணியம் தன் உரையில்,
இந்த அறக்கட்டளை கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக உலக தரம் வாய்ந்த கண் சிகிச்சை அளித்து சமுதாயத்தில் மாபெரும் தாக்கத்தை எற்படுத்தியுள்ளது என்றார்.
கண் பார்வை நலனை பாதுகாப்பதற்காக இந்த அறக்கட்டளை பல தசாப்தங்களாக மாவட்ட நிர்வாகத்துடன் கைகோர்த்து சேவை செய்து வருகிறது. மனித வளம், தனித்துவமான நிபுணத்துவம், நவீன உபகரணங்கள், உள்கட்டமைப்பு வசதிகள் ஆகிவயற்றால் இது சாந்தியமாயிற்று என்றார் டாக்டர் பாலசுப்பிரமணியம்.
சங்கரா அறக்கட்டளையின் கருவிழி மற்றும் ஒளிவிலகல் அறுவை சிகிச்சை நிபுணரும், தொழில்நுட்ப துறையின் இயக்குனருமான டாக்டர் ஜே.கே.ரெட்டி புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் லாசிக் லேசர் மையத்தில் ஜெர்மன் நாட்டின் ஸ்க்விண்ட் அமரிஸ் 1050 ஆர்எஸ் ரக உபகரணம் பொருத்தப்பட்டுள்ளது என்றார்.
அந்த உபகரணம் கண் பார்வை குறைபாட்டை தானாகவே பரிசோதித்து, அந்த விவரங்களை தங்குதடையின்றி லேசர் கருவிக்கு அனுப்பும். அதனடிப்படையில் துல்லியமாக கண் பார்வை சரி செய்யப்படும். இந்த நவீன உபகரணத்தின் மூலம் சாதாரண கட்டணத்திலேயே சேவை அளிக்கப்படும் என்றார் டாக்டர் ரெட்டி.
சங்கரா கண் அறக்கட்டளை லாபநோக்கமற்ற நிறுவனமாகும்.
1977ம் ஆண்டு மிகவும் சிறிய ஆரம்ப சுகாதார மையமாக டாக்டர் ரமணி, டாக்டர் ராதா ரமணி ஆகிய இருவரும் சேர்ந்து தொடங்கிய இந்த இயக்கம்;, தற்போது, நாடு முழுவதும் 14 சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனைகளாக உருவெடுத்து தொடர்ந்து சமுதாய பணி செய்யும் மாபெரும் அமைப்பாக வடிவெடுத்துள்ளது. இந்த அறக்கட்டளை தேசிய கண் பராமரிப்பு இயக்கத்துடன் ஒன்றிணைந்து செய்லபடுகிறது.
இந்திகழ்ச்சியில் பிரமுகர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், மற்றும் ஐசிஐசிஐ அறக்கட்டளையில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.